‘ரபேல்’, விஜய் மல்லையா விவகாரங்களில் மேலும் பல உண்மைகள் விரைவில் வெளிவரும் – ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதிக்கு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்றார். 2-வது நாளான நேற்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ரபேல் போர் விமானம் தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டுடன் ஒப்பந்தம் செய்திருந்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கும். அமேதியில் கூட அந்த நிறுவனம் உள்ளது. ஆனால், அந்த நிறுவனத்தை புறக்கணித்ததால், இளைஞர்களுக்கு கெடுதலாகி விட்டது. இந்த ஊழல் பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ரபேல் போர் விமான ஊழல், ஒரு தொடக்கம்தான். இந்த விவகாரத்திலும், விஜய் மல்லையாவுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் மேலும் பல உண்மைகள் விரைவில் வெளிவரும். அந்த உண்மைகளை பார்த்து மக்களே முடிவு செய்யட்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
ராணுவ வீரர்களுடன் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கம் மூலமாக உரையாடினார். அதில் அவர் கூறியதாவது:-
விமானப்படை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், உயிரிழந்த போர் விமானிகளின் குடும்பத்தினர், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஊழியர்கள் என ஒவ்வொருவரின் வேதனையையும் நாங்கள் அறிவோம். உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ளோம். உங்களை அவமதித்த, உங்களிடம் இருந்து பணத்தை பறித்தவர்களை நீதியின் முன்பு நிறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ‘ரபேல்’ போர் விமான பேரம் ரத்து ஆனதற்கு சோனியா காந்தியின் மருமகன் தலையீடே காரணம் என்று பா.ஜனதா கூறியதற்கு காங்கிரஸ் கட்சி நேற்று பதில் அளித்தது. அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்குத்தான் காண்டிராக்ட் கொடுத்தோம். ஆனால், அதை மோடி, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளார். இதற்கு பதில் சொல்ல முடியாமல், மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் சேறு வாரி இறைத்து வருகிறார்கள்.
‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ கதையை நாடு கேட்டுள்ளது. எப்போது மோடி பாபாவும், 40 திருடர்களும் பதில் சொல்வார்கள் என்று இப்போது நாடு கேட்கிறது. நீங்கள் நாட்டின் பிரதமரா? அம்பானியின் பிரதமரா? இவ்வாறு அவர் கூறினார்.