குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை -சுப்ரீம் கோர்ட்டு
கடுமையான குற்ற வழக்குகளில் 2 ஆண்டு களுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போது தடை உள்ளது.
அதேபோல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி பா.ஜனதா தலைவர் அஸ்வினி உபாத்யாயா, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஜே.எம்.லிங்டோ மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், “விரைவில் நடக்கவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் கடுமையான குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் போட்டியிட திட்டமிட்டு உள்ளனர். எனவே உடனடியாக 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்து முடிக்காவிட்டால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். இது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல” என்றும் அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.
கடந்த மாதம் 28-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு 100 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.
நீதிபதிகள், “கடும் குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் நிற்பதற்கு தடை எதுவும் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரே காரணத்துக்காக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதற்குரிய நிலையில் நாங்கள் இல்லை. இது தொடர்பான சட்ட வரையறைக்குள் எங்களால் செல்ல இயலாது” என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினர்.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக என்.என்.வோரா குழு தாக்கல் செய்த அறிக்கையை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், “அப்போதே அரசியலில் குற்றமும் கலந்துவிட்டதை பலமாக உணர முடிந்தது. எனவே அரசியலில் குற்றம் என்பது பயங்கரவாத செயலுக்கு ஒப்பானதாகும்” எனவும் குறிப்பிட்டனர்.
மேலும், குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் விதமாக பல்வேறு உத்தரவுகளையும் நீதிபதிகள் பிறப்பித்தனர்.
அதன் விவரம் வருமாறு:-
* அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதை அனைத்து வகையிலும் தவிர்க்க வேண்டும்.
* தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்றவழக்குகள் தொடர்பான அத்தனை விவரங்களையும் உள்ளூர் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
* தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது தங்கள் மீதான குற்றவழக்குகள் பற்றிய விவரங்களை கொட்டை எழுத்துகளில் எழுதி தனி பிரமாண பத்திரமாக அளிக்க வேண்டும்.
* அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் மீதான குற்ற வழக்குகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தங்களின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். ஏனென்றால் தங்களுடைய வேட்பாளர் எத்தகைய குற்ற வழக்குகளை பின்னணியாக கொண்டவர் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு.
* லஞ்சம் மற்றும் ஊழல் என்பது இந்த நாட்டின் முதுகெலும்பையே பாதிப்பதாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்திய ஜனநாயகத்தின் வேரை இது பலமாக தாக்குவதால் அதை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு சில நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
* எனவே குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள அரசியல்வாதிகள் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட முடியாதவாறும், அவர்கள் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் பங்கேற்க இயலாதவாறும், அவர்களது உறுப்பினர் தகுதியை பறிக்கும் விதமாகவும் கடுமையான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றவேண்டும். அரசியலில் குற்றம் என்னும் புற்றுநோய் பரவுவதை நாடாளுமன்றம்தான் தடுக்கவேண்டும். மாசு கலந்துள்ள அரசியல் நீரோடையை சுத்தம் செய்யவேண்டிய பொறுப்பும் அதற்கு உள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் நாடு முழுவதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள 1,765 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து தப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.