முதல்-அமைச்சரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கவில்லை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் வாதம்
தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலை துறை, ஒப்பந்த பணி குறித்த அனைத்து விவரங்களையும் அறிக்கையாக அரசு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சரின் நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை. முதல்-அமைச்சரின் (மகனின் மனைவி) மருமகளின் சகோதரியின் கணவருடைய சகோதரருக்கு தான் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் சந்தை மதிப்புடன் ஒப்பிடும்போது நியாயமான விலைப்புள்ளிகளுடன் தான் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர் கூறுவதுபோல ஒரு கி.மீ. தூரமுடைய சாலையை ரூ.2.20 கோடிக்கு போட முடியும் என்பதை ஏற்க முடியாது.
ஏனெனில், இது இடத்திற்கு இடம் மாறுபடும். அந்த பகுதியின் மண் தரம் மற்றும் மூலப்பொருட்களின் சந்தை மதிப்பு விலையை பொறுத்து இது மாறுபடும். சில இடங்களில் மத்திய அரசின் கீழ் போடப்பட்ட சாலைகளுக்கு ரூ.30 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ‘முதல்-அமைச்சர், அமைச்சர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்து சில நிறுவனங்களை உருவாக்கி, அந்த நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக ஒப்பந்தங்களை பெற்றுள்ளனர். அதுவே உலக வங்கி விதிமுறைகளுக்கு எதிரானது’ என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதி, ‘இந்த ஒப்பந்தங்களில் விதிகள் மீறப்பட்டு உள்ளதா? என்று உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, அட்வகேட் ஜெனரல், இந்த ஒப்பந்தங்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?, அவற்றின் தற்போதைய நிலை என்ன?, கண்காணிப்பு குழுக்களில் இடம்பெற்றவர்கள் யார்? என்பது குறித்த லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.