அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி எண்கள் கொண்ட 12 இலக்க அடையாள அட்டையை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து 2009-ம் ஆண்டு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது.
பின்னர் படிப்படியாக அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இதையடுத்து 2016-ல் ஆதார் சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது.
ஆதார் சட்டம் மற்றும் ஆதார் திட்டம் ஆகியவற்றை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
5 நீதிபதிகள் அமர்வு விசாரணையை தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சலுகைகளும் பெற ஆதார் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து வாரத்தில் 3 நாட்கள் விசாரணை என்ற அடிப்படையில் 38 நாட்கள் தொடர்ந்து நீதிபதிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியது. முதலில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தனது தீர்ப்பை வாசித்தார். பின்னர் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் ஆகியோரின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. இவர்கள் மூவரின் தீர்ப்பும் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது.
அதேநேரம் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் தங்களது தனிப்பட்ட கருத்துகளை தனியாக எழுதி இருந்தனர். எனினும் அசோக் பூஷண், பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் 4 நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானதாக அமைந்தது.
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்ற நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து தான் மாறுபட்ட கருத்துகளை கூறி இருப்பதாக தெரிவித்தார். நீதிபதிகளின் தீர்ப்பு 1,448 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், அசோக் பூஷண் ஆகியோர் வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
* அரசியல் சாசன சட்டப்படி ஆதார் அடையாள அட்டை செல்லும்.
* தனி நபரின் அடிப்படை உரிமைகள் எதையும் ஆதார் சட்டம் மீறவில்லை. ஆதார் அட்டைக்காக அத்தியாவசிய தகவல்கள் மட்டுமே பெறப்படுகிறது.
* ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாக மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றியதை கோர்ட்டு ஏற்றுக்கொள்கிறது.
* அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் தேவை.
* சமுதாயத்தில் நலிவடைந்த மக்கள் பயன் பெற ஆதார் உதவுகிறது.
* வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை.
* நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டியது அவசியம்.
* வங்கி கணக்குகளுடன் ஆதாரை இணைக்கவேண்டியது கட்டாயம் இல்லை.
* டெலிபோன் சேவை வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்கக்கூடாது.
* ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்கள் யாரிடம் இருந்தும் ஆதார் தொடர்பான தகவல்களை பெற முடியாது. எனவே, டெலிபோன் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஆதார் தகவல்களை தரத்தேவையில்லை.
* ஆதார் சட்டத்தின் அடிப்படையில் ஆதார் தொடர்பான தகவல்களை 5 ஆண்டுகளுக்கு மேல் சேமித்து வைக்க முடியும் என்று உள்ளது. ஆனால் ஆதார் தகவல்களை 6 மாதங்களுக்கு மேல் சேமித்து வைக்கக்கூடாது.
* மத்திய கல்வி வாரியம், நீட், பல்கலைக்கழக மானிய குழு ஆகியவை நடத்தும் தேர்வுகளுக்கு ஆதாரை இணைக்கவேண்டியது இல்லை.
* பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அவசியம் கிடையாது.
* சிறுவர்-சிறுமிகள் எவ்வித சேவைகளின் பயனைப் பெறுவதற்கும் ஆதாரை காரணம் காட்டி மறுக்கக்கூடாது.
* சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களுக்கு அரசு ஆதார் வழங்கக்கூடாது.
இவ்வாறு அவர்களது தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் தனித்தனியாக அளித்த தீர்ப்பில் கூறி இருந்ததாவது:-
நீதிபதி ஏ.கே.சிக்ரி
ஆதார் அட்டையை போலியாக உருவாக்க வாய்ப்பே இல்லை. ஆதார் மற்ற அடையாள ஆவணங்களைப் போன்றது அல்ல. இதற்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகிறது. ஆதார் அட்டை சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கும் ஆதாரமாகவும் உள்ளது. ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவ தன்மை கொண்டது என்பதே சரியானது ஆகும்.
தனிநபர் சுதந்திரத்தை ஆதார் சட்டமும், ஆதார் திட்டமும் பறிக்கிறது என்பதே பிரச்சினையாக உள்ளது. எனவே ஆதார் தகவல்களை மிக பத்திரமாக பாதுகாக்கும் வளையத்துக்குள் விரைவில் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் தாங்கள் கண்காணிக்கப்படும் நிலை உள்ளது என்ற மனுதாரர்களின் கவலையை நீக்க முடியும்.
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
மாநிலங்களவையை தவிர்த்துவிட்டு ஆதார் சட்டத்தை மக்களவையில் நிதி மசோதாவாக நிறைவேற்றியதை ஏற்க இயலாது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு மோசடி செயலாகும். இது அரசியல் சாசனத்தின் 110-வது பிரிவை மீறுவதாக அமைந்துள்ளது.
இந்த மசோதாவை நிதி மசோதாவாக வகைப்படுத்திய சபாநாயகரின் நடவடிக்கை நீதிமன்றத்தால் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நடவடிக்கையாகும்.
அரசு நலத்திட்டங்களின் உதவி பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் ஆதார் சட்டத்தின் பிரிவு 7, அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும். இது இந்த நாட்டில் ஆதார் இல்லாமல் மக்கள் வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும்.
தற்போது ஆதார் இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை என்ற நிலை உள்ளது. இது அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவை மீறுவதாக அமைந்து உள்ளது. மேலும் ஒவ்வொரு தகவலையும் இணைக்கவேண்டும் என்பது தனி நபரின் அந்தரங்கம், சுதந்திரம், தன்விருப்ப உரிமை ஆகியவற்றில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே மொபைல் சேவை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை நீக்கிட வேண்டும்.
ஆதார் என்பது மனிதனின் பன்முகத்தன்மையை மறுத்து அவனுடைய அடையாளத்தை வெறும் 12 எண்களுக்குள் முடக்கி விடுகிறது.
அரசாங்கம் முதலில் மக்களின் பிரத்யேகமான தகவல்களை பாதுகாக்கும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஆதார் வழியாக பெறப்படும் தகவல்கள் வெளியில் கசிந்தால் அது மக்களை வேவு பார்ப்பதற்கு வழி வகுக்கும்.
நீதிபதி அசோக் பூஷண்
ஆதாரை மொபைல் போன் எண்ணுடன் இணைக்கவேண்டிய அவசியம் இல்லை.
ஆதார் அட்டைக்காக ஒருவர் தன்னைப்பற்றிய தகவல்களை தெரிவிப்பது தனிநபர் அந்தரங்கத்தை பாதுகாக்கும் உரிமையை மீறுவதாக உள்ளது என்று கூறுவதை ஏற்க இயலாது. ஏனென்றால் தனிநபர்கள் இதுபோன்ற விவரங்களை மற்ற அடையாள அட்டைகளுக்கு ஆதாரமாக அளிக்கத்தான் செய்கிறார் கள்.