பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியின் மருமகன் கைது
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி. இவரது மருமகன் முர்டாஸா. இவர் துபாயில் பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பு எப்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈடன் வீட்டு வசதித்திட்ட ஊழல் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி பாகிஸ்தான் தகவல்துறை மந்திரி பவாத் சவுத்ரி, இஸ்லாமாபாத்தில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
தனியார் வீட்டு வசதி ஊழலில் முன்னாள் தலைமை நீதிபதியின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஈடன் வீட்டு வசதி ஊழலில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கி இருக்கிறோம். முன்னாள் தலைமை நீதிபதியின் சம்மந்திதான் (மகளின் மாமனார்) ஈடன் வீட்டு வசதி நிறுவனத்தின் அதிபர் ஆவார்.
ஈடன் வீட்டு வசதித்திட்டத்தால் 200 முதல் 300 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இந்த வீட்டு வசதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் அவர்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எனவேதான் இது தொடர்பான வழக்குகளை இப்திகார் சவுத்ரி தானே தனிப்பட்ட முறையில் விசாரித்து, அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கிறார்.
இந்த வழக்கில் இப்திகார் சவுத்ரியின் மருமகன் மட்டுமல்ல, மகள், சம்மந்தி, மகன் அர்சாலன் இப்திகார் ஆகியோரும் குற்றவாளிகள் ஆவர். தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.