குக் சதத்துடன் தென் ஆப்பிரிக்கா 250 ரன்களுக்கு ஆல் அவுட்: வெற்றிப்பாதையில் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 250 ரன்களுக்கு இன்று சுருண்டது. இந்த அணியின் தொடக்க வீரர் குக் 104 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக விழுந்தார்.
அடிலெய்டில் பகலிரவாக நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 76 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. டு பிளெஸ்ஸிஸ் 118 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 102 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 138, மிட்செல் ஸ்டார்க் 16 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். கவாஜா 308 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 145 ரன்களிலும், ஸ்டார்க் 53 ரன்களிலும் ஆட்ட மிழந்தனர்.
அடுத்து வந்த நாதன் லயன் 13, ஜேக்சன் பேர்டு 6 ரன்களில் நடையை கட்ட 121.1 ஓவர்களில் 383 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் அபோட், ரபாடா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
124 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 69 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்த்திருந்தது.
டீன் எல்கர் 0, ஹசிம் ஆம்லா 45, டுமினி 26, கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 12, டெம்பா பவுமா 21, கைல் அபோட் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்டீபன் குக் 81 ரன்களுடனும், குயிண்டன் டி காக் ரன் எதும் எடுக்காத நிலையில் களத்தில் இருந்தனர். டி காக் விளையாடிய 3 பந்துகளிலும் பீட்டன் ஆனார்.
இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய போது குவிண்டன் டி காக் 5 ரன்களில் பேர்ட் பந்தில் எல்.பி. ஆகி வெளியேறினார். பிலாண்டர் 17 ரன்களில் 2 பவுண்டரிகளுடன் ஸ்டார்க் பந்தில் எல்.பி.ஆனார். ரபாடா 7 ரன்களில் ஹேசில்வுட் பந்தை விக்கெட் கீப்பர் வேடிடம் கேட்ச் கொடுத்தார். தொடக்க வீரர் குக் அருமையாக ஆடி சதம் எடுத்து 104 ரன்களில் கடைசி விக்கெட்டாக ஸ்டார்க்கின் அருமையான பந்துக்கு பவுல்டு ஆனார். தென் ஆப்பிரிக்கா 85.2 ஓவர்களில் 250 ரன்களுக்குச் சுருண்டது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 3, ஸ்டார்க் 4 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்கு 127 ரன்கள்.