ஆகம விதிகளுக்கு புறம்பாக ‘சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று விளக்கு ஏற்றி பெண்கள் உறுதிமொழி’
‘சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் பாரத் இந்து முன்னணியின் மகளிர் அணி சார்பில் சென்னை மாநகர மகளிர் அணி தலைவி லட்சுமி மற்றும் கோவாவில் இருந்து வந்திருந்த, இந்து ஜனக்குருதி சமிதியின் ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஜெய்குமார் ஆகியோர் தலைமையில் பெண்கள் சென்னை, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10.30 மணி அளவில் திரண்டனர். பின்னர், பெண்கள் அய்யப்ப சாமியின் சரணங்களை கூறியபடி, விளக்கு ஏற்றி கோவிலை வலம் வந்தனர். பின்னர் கொடிமரம் அருகில் விளக்குளை வைத்து ‘ஆகம விதிகளுக்கு புறம்பாக சபரிமலைக்கு செல்ல மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் லட்சுமி, சுகந்தி ஜெய்குமார் மற்றும் மாநிலத்தலைவர் ஆர்.டி.பிரபு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘உடல் ஒத்துழைக்காது’
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பால் இந்துக்கள் மனம் புண்பட்டு இருப்பதுடன், தமிழகம் போர்க்களமாக மாறி வருகிறது. இந்து தர்மம் இயற்கையுடன் தொடர்புடையது.
குறிப்பாக பொங்கல் அன்று சூரியனை வழிபடுவது, பஞ்சபூதங்களை வழிபடுவது போன்றவற்றை கூறலாம். பிரம்மச்சாரிய விரதம் இருக்கும் சபரிமலை அய்யப்பன் சாமியை தரிசிக்க 48 நாட்கள் விரதம் இருந்து தான் செல்ல வேண்டும். ஆனால் உடல் ரீதியாக பெண்களால் தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது. உடலும் ஒத்துழைக்காது.
கலாசாரத்தை சிதைக்க முயற்சி
உலகில் உயர்ந்த தர்மத்தை கடைப்பிடிக்கும் இந்துக்கள் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மீறுவது கிடையாது. தர்மம் பற்றி தெரியாத தீயசக்திகள் புகார் அளித்து நம்முடைய தர்மத்தையும், கலாசாரத்தையும் கொச்சைப்படுத்தி சிதைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் இடம் தரமாட்டோம். தர்மம் மோசமான பாதையை நோக்கி செல்வதால் தான் அய்யப்ப சாமி கோபம் கொண்டதால் தான் கடந்த மாதம் கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளம் ஏற்பட்டது.
எனவே தர்மத்தை காக்க ஆகம விதிகளின் படித்தான் அனைவரும் நடக்க வேண்டும்.
சீரழிக்க கூடாது
நீதிபதிகள் மதம் சார்ந்த விவகாரங்களில் தீர்ப்பு வழங்கும் போது, பெரும்பான்மையினர் தலைமுறை தலைமுறையாக மதிக்கும் மதநம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கக்கூடாது.
வெளிநாட்டினரே நம்முடைய கலாசாரத்தை பின்பற்றி வரும் நிலையில், நாம் நம்முடைய கலாசாரத்தை சீரழிக்க கூடாது. எனவே நாங்கள் ஆகம விதிகளுக்கு புறம்பாக இளம் வயதில் சபரிமலைக்கு செல்ல மாட்டோம். எனவே தற்போது வழங்கிய தீர்ப்பை பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கங்காதீஸ்வரர் கோவிலில் பெண்கள் அதிக அளவில் திரண்டதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.