பாகிஸ்தான் அணியின் உடை அணிந்து இந்தியக் கொடி ஏந்துவேன்- சானியா மிர்சா
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியதுமே சமூக ஊடகங்களில் கருத்து பகிர்வதை சானியா மிர்சா தவிர்த்து வந்தார். இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றதும் அவருடைய நிலைப்பாடு என்ன விதமாக இருக்கும்? பாகிஸ்தான் அணிக்காக ஆடும் கணவர் சோயிப் மாலிக்குக்கு அவருடைய ஆதரவு எந்த விதத்தில் இருக்கும்? என்பது பற்றி மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்.
ஆசியக்கோப்பை போட்டிகளில் சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி இருக்கிறார்? அதுபற்றி?
சோயிப் மாலிக், சிறப்பாக விளையாடக்கூடியவர். அதனால்தான் 35 வயதை கடந்த பிறகும், பாகிஸ்தான் அணியில் அங்கம் வகிக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது அதிரடி ஆட்டத்தை உணர முடிகிறது. அவர் ஆசியக்கோப்பை மட்டுமின்றி, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலகக் கோப்பை போட்டிகளிலும் சிறப்பாக விளை யாடுவார்.
சோயிப் மாலிக், இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதை பற்றி?
1999-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். 19 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் அனுபவம், அவரை சிறப்பாக விளையாட வைக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்திய அணிக்கு எதிரான ஆட்டங்களில் அதிகமாக விளையாடி இருப்பதால், அவரால் சிறப்பாக விளையாட முடிகிறது.
அடுத்த வருடம் நடக்க இருக்கும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டியில் விளையாடினால், நீங்கள் எந்த அணிக்கு ஆதரவு கொடுப்பீர்கள்?
இந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினமான ஒன்று. பிறந்த வீடு வேண்டுமா..? இல்லை புகுந்த வீடு வேண்டுமா..? என்று திருமணமான பெண்களை கேட்டால், அவர்களால் சரியான பதிலை கூற முடியாது. அந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் நானும் சிக்கியிருக்கிறேன். எனக்கு பிறந்த நாடும் வேண்டும். அதேசமயம், புகுந்த நாடும் வேண்டும். புகுந்த நாட்டிற்காக இல்லாவிட்டாலும், என்னுடைய கணவரை உற்சாகப்படுத்த, பாகிஸ்தானிற்கு ஆதரவு அளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால், பாகிஸ்தான் அணி உடையில், இந்தியக் கொடி ஏந்தி வருவேன்.
கணவரின் வெற்றி, தோல்வியில் உங்களை சம்பந்தப்படுத்தி, பேசியது உண்டா?
இது எல்லா வீடுகளிலும் நடப்பதுதான். கணவரின் தொழில் வளர்ச்சி பெற்றால், மனைவி வந்த யோகம் என்பார்கள். அதேசமயம், நஷ்டத்தில் தவிக்கும்போது, மனைவி வந்த நேரமே சரியில்லை என்று திட்டுவார்கள். இந்த நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. சோயிப் மாலிக்கின் ஆட்டம் சிறப்பாக இருந்தால், சானியா அதிர்ஷ்டக்காரி. ஆட்டம் மோசமாகிபோனால், துரதிர்ஷ்டசாலி.
கணவருக்கு நீங்கள் கொடுத்த விலையுயர்ந்த பரிசு எது?
ஓய்வு நேரங்களில் சோயிப் மாலிக், வலைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார். அதில் நான் கலந்து கொண்டால், அவருக்கு எல்லை கடந்த ஆனந்தம் உண்டாகும். ஒருமுறை அவரது பிறந்தநாள் அன்று, நாள் முழுக்க அவருடன் வலைப்பயிற்சி மேற்கொண்டேன். என்னால் முடிந்தவரை பந்துகளை வேகமாக வீசி எறிந்து, அவரை ஆனந்தப் படுத்தினேன். அதையே, விலையுயர்ந்த பரிசாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.