குமரி பேராசிரியைக்கு அரிவாள் வெட்டு: போலீசுக்கு பயந்து தலைமறைவான கணவர் கர்நாடகாவில் தற்கொலை
குமரி பேராசிரியையை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவான கணவர் கர்நாடகாவில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அரிவாள் வெட்டு
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரத்தை சேர்ந்தவர் டால்டன் செல்வ எட்வர்ட் (வயது 40), வக்கீல். இவருடைய மனைவி ஜெகதீஷ் ஷைனி (33). அரசு கல்லூரி பேராசிரியை. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2½ வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் டால்டன் செல்வ எட்வர்ட் ஆவேசத்துடன், மனைவி என்றும் பாராமல் ஜெகதீஷ் ஷைனியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த ஜெகதீஷ் ஷைனி உயிருக்காக போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குள் டால்டன் செல்வ எட்வர்ட் அரிவாளுடன் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று காலை 7 மணியளவில் கர்நாடக மாநிலம் மண்டியா அருகில் உள்ள எலியூர் பகுதி ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. உடலில் இருந்த சட்டை பையை போலீசார் சோதனை செய்தபோது, பார் கவுன்சில் அடையாள அட்டை இருந்தது.
அந்த முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில் இறந்தவர், மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற டால்டன் செல்வ எட்வர்ட் என்பது தெரியவந்தது. குடும்ப தகராறில் மனைவியை வெட்டிய அவர் போலீசுக்கு பயந்து கர்நாடகா வந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.