ஹிந்தி பேசும் தமிழர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிப்பு
ஹிந்தி பேசும் தமிழர்களின் எண்ணிக்கை, கடந்த 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்த நிலையில், பலர் ஹிந்தி மொழி கற்றுக்கொள்வதற்கு தடை ஏற்பட்டிருந்தது. இதனிடையே, தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச தொடர்கள் ஒளிபரப்பு துவங்கியநிலையில், மக்களுக்கு ஹிந்தி மொழி மீதான மோகம் சிறிது சிறிதாக அதிகரித்தது.
மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் வருகைகளுக்கு பிறகு, பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை இப்பள்ளிகளில் படிக்கவைக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பள்ளிகளில், மாணவர்களுக்கு இரண்டு மற்றும் மூன்றாம் தேர்வாக ஹிந்தி மொழிப்பாடம் உள்ளது.
மக்கள் தங்கள் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்காக வடமாநிலங்களில் தற்போது அதிகளவில் வேலைக்கு செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் நாட்டின் வடபகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கு ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். இதற்காக, அவர்கள் ஹிந்தி மொழியை கற்றுத்தேர்கின்றனர்.
தமிழகத்திலேயே செயல்பட்டு வரும் நிறுவனங்களில் கூட உயரதிகாரிகள் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களாகவே இருப்பதால், அந்நிறுவனத்தின் ஊழியர்களும், ஹிந்தி கற்றுக்கொள்ள முன்வருகின்றனர். அந்த உயரதிகாரிகளும், தமிழ் மொழியை கற்றுவருகின்றனர்.
இறங்குமுகத்தில் கன்னடம் :
2001 முதல் 2011ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில், தமிழகத்தில் ஹிந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளபோதிலும், இதே காலகட்டத்தில் கன்னடம் பேசும் தமிழர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் சரிவடைந்துள்ளது.