பலி எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு : இந்தோனேஷியாவை புரட்டி போட்ட சுனாமி
இந்தோனேஷியாவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 832ஆக அதிகரித்து உள்ளது.தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின், வடக்கு பகுதியில் அமைந்துள்ள, சுலவேசி தீவில் உள்ள பலு நகரில், சமீபத்தில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது, ரிக்டர் அளவில், 7.5 ஆக பதிவானது. சுற்றுலா தலமாக விளங்கும், பலு நகரில், 3.8 லட்சம் பேர் வசிக்கின்றனர்.இங்கு, அதிகளவில் சுற்றுலாப் பயணியரும் வருவது வழக்கம். சுனாமி வருவதற்கு முன், கடற்கரை திருவிழாவை கொண்டாடுவதற்காக, பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தபடி இருந்தனர்.சேதம்அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், பலு நகரில் உள்ள ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன; வணிக வளாகங்கள் சேதமடைந்தன.இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின், திரும்ப பெறப்பட்டது.ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில், பலு நகர கடலோரப் பகுதிகளில், சுனாமி அலைகள் தாக்கின. 3 மீட்டர் உயரத்துக்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகள், கரையை நோக்கி சீறிப் பாய்ந்து தாக்கின.சுனாமி தாக்கியதில், கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன.கடற்கரையில் கூடியிருந்தவர்கள் மற்றும் வீடுகளில் இருந்த பலர், ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரையில், ஏராளமான உடல்கள் கரை ஒதுங்கி வருகின்றன.இந்நிலையில் நேற்று, நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பலியானோர் எண்ணிக்கை, 832 ஆக அதிகரித்துள்ளதாக, தேசிய பேரிடர் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.மேலும், ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.சிகிச்சைஇடிபாடுகள் மற்றும் சுனாமியில் சிக்கி காயமடைந்த, 1,000-க்கும் மேற்பட்டோருக்கு, மருத்துவமனைகளுக்கு வெளியே, திறந்தவெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வீடுகளை இழந்தவர்கள், திறந்தவெளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பலு நகரில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.சுனாமி அலைகளில் பலர் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என, அஞ்சப்படுகிறது.’ஹீரோ’வாக மாறிய விமான நிலைய ஊழியர்பலு நகரில் உள்ள விமான நிலையத்தில், விமான போக்குவரத்து கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர், அந்தோனிஸ் குணவன் அகுங், 21. சமீபத்தில், பலு நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அப்போது அவரை, பணியை விட்டு, பத்திரமாக வரும்படி அதிகாரிகள் அழைத்தனர். அந்த சமயத்தில்,பயணியர் விமானம் ஒன்று வரஇருந்ததால், ‘விமானம் பத்திரமாக வந்த பின், நான் வருகிறேன்’ என, அகுங் கூறினார்.பலு நகரில் தரையிறங்க வேண்டிய விமானத்திற்கு, அவர், தகவல் தந்தபடியே இருந்தார். திடீரென, பலு நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், நான்கு அடுக்கு கோபுரத்தில் இருந்து, அகுங் குதித்தார்.இதில் படுகாயம் அடைந்த அவர், உயிரிழந்தார். அவர் அளித்த தகவல்களால், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இந்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.