டெல்லியில் போதை பொருள் கும்பலை எதிர்த்த நபர் நடுரோட்டில் சுட்டு கொலை; வைரலாகும் வீடியோ
டெல்லியில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கானோர் போதை பொருளை வாங்கி செல்கின்றனர். தென்கிழக்கு டெல்லியின் தைமூர் நகரில் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை போதை பொருள் விற்பனை ஆகிறது. இவர்களுக்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், போதை பொருளுக்கு எதிராக போராடி வரும் இந்த பகுதியை சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர் மாபியா கும்பலால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதுபற்றிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதில், ரூபேஷ் சாலையில் இருக்கும்பொழுது அவரை 2 பேர் கடந்து செல்கின்றனர். அவர்களில் ஒருவன் துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டு விட்டு நடந்து செல்கிறான். இதில் ரூபேஷ் சாலையில் சரிந்து விழுகிறார்.
அவர்கள் இருவரும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்கும் மாபியா கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.
இதுபற்றி ரூபேஷின் சகோதரர் உமேஷ் குமார் கூறும்பொழுது, நாங்கள் போதை பொருள் கும்பலுக்கு எதிராக செயல்பட்டோம். காவல் துறை உயரதிகாரிகளுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். தொலைபேசி வழியே அவர்களிடம் பேசியுள்ளேன். மூத்த அதிகாரி ஒருவரை நேரிலும் சந்தித்தேன்.
அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தந்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. எனது சகோதரர் கொல்லப்பட்டு விட்டார். நாளை நானும் கொல்லப்படலாம். ஆனால் மற்றவர்களை காக்கும் முயற்சியை நான் நிறுத்தமாட்டேன் என கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தினை அடுத்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் குதித்தனர். இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. காவல் துறை அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பின் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுபற்றிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.