குஜராத்தின் கிர் காடுகளில் கடந்த 18 நாட்களில் 21 சிங்கங்கள் உயிரிழப்பு
குஜராத்தில் 1,400 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ள கிர் காடுகளில் சிங்கங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இங்கு சாலைகள் அமைப்பது, கிராமங்கள் விரிவாக்கம் செய்யப்படுவது மற்றும் சட்டவிரோத சுரங்கங்கள் தோண்டுவது ஆகியவற்றால் அதன் வாழ்விடங்கள் பாதிப்படைந்து உள்ளன.
கடந்த 2015ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிர் காடுகளில் 109 ஆண் சிங்கங்கள், 201 பெண் சிங்கங்கள், 73 இளஞ்சிங்கங்கள் மற்றும் 140 சிங்க குட்டிகள் என மொத்தம் 523 சிங்கங்கள் இருந்தன.
கடந்த வாரம் பெண் சிங்கம் மற்றும் சிங்க குட்டி ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனை அடுத்து அங்கு 10 சிங்கங்களின் உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதனால் கடந்த 18 நாட்களில் இங்குள்ள 21 சிங்கங்கள் உயிரிழந்து உள்ளன.
சிங்கங்கள் இடையேயான மோதல் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு ஆகியவை சமீபத்திய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
இதனை தொடர்ந்து சமர்டி பகுதியில் இருந்து 31 சிங்கங்கள் மீட்கப்பட்டு விலங்கு நல மையத்தில் தனியாக வைத்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
குஜராத்தின் கிர் காடுகளில், குறைந்த காலத்தில் சிங்கங்கள் அதிக அளவில் உயிரிழந்து உள்ளது வன துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்கள் இடையே வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது.