Breaking News
டெல்லிக்குள் அனுமதி மறுப்பால் கலவர பூமியானது எல்லை; நாங்கள் என்ன ஆபத்தானவர்களா? விவசாயிகள் கேள்வி

விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை, விவசாய கடன் தள்ளுபடி, மின்சார கட்டண குறைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரகாண்ட் மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கினர். பாரதிய விவசாயிகள் அமைப்பு (பிகேயு) சார்பில் 23-ம் தேதி விவசாயிகள் 10 நாள் பேரணியை ஹரித்துவாரில் தொடங்கினர். விவசாயிகள் டிராக்டர்கள், பேருந்துகள், சிறு வாகனங்களில் பேரணியாக டெல்லியை நோக்கி வந்தனர். விவசாயிகள் காசியாபாத், டெல்லி-உத்தரப்பிரதேசம் தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக செல்ல முயன்றபோது போலீஸ் அனுமதி மறுத்தது.
டெல்லி எல்லையில் விவசாயிகள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையும் அதிகரிக்கப்பட்டது. டெல்லியில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்புக்கு எச்சரிக்கையாகும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மீது தடியடி

விவசாயிகளின் பேரணி தொடர்பாக ஏற்கனவே அறிந்த போலீஸ் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

எல்லை வந்தடைந்த விவசாயிகளிடம் டெல்லிக்குள் பிரவேசிக்க முடியாது, திரும்பி செல்லுங்கள் என்றனர். டெல்லி, கிழக்கு டெல்லி பகுதியில் 8-ம் தேதி வரையில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் அனுமதி மறுப்பை ஏற்காத விவசாயிகள் டெல்லிக்குள் பிரவேசிக்க எல்லையில் முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது இருதரப்பு இடையேயும் மோதலான போக்கு ஏற்பட்டது.

விவசாயிகள் கூட்டத்தை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தடியடியும் நடத்தப்பட்டது. இதனால் டெல்லி – உத்தரபிரதேசம் எல்லை போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த மோதல் காரணமாக பலர் மயக்கம் அடைந்துள்ளனர். விவசாயிகள் பலர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் மிகவும் கடினமான முறையில் நடந்துக்கொண்டார்கள் என விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உணவின்றி தவிப்பு

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முடியாமல் எல்லையில் தவிக்கும் நிலையில் அவர்கள் உணவுப்பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களால் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுகளை வாங்க முடியவில்லை. அங்கு விலை அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உணவுப்பொருட்களை தேடி ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலை நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் காட்டம்

டெல்லிக்குள் அனுமதிக்க விடாமல் விவசாயிகளை தடுத்து நிறுத்திய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். “மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, மோடி அரசு நாங்கள் பிரிட்டிஷ் அரசைவிட வேறுப்பட்டவர்கள் கிடையாது என்பதை நிரூபணம் செய்துள்ளது. பிரிட்டிஷ் அரசு விவசாயிகளை கொள்ளையடித்தது, ஆனால் மோடி அரசு விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டை வீசுகிறது,” என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. மோடி அரசு தேசவிரோதமானது, அந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவது மட்டுமே விவசாயிகளுக்கான வழியாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சித்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். பிற எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி மாநில அரசு கூறியுள்ளது.

நாங்கள் என்ன ஆபத்தானவர்களா?

போராட்டத்தில் கலந்துக்கொண்ட பஞ்சாப் மாநில விவசாயி பேசுகையில், “நாங்கள் என்ன ஆபத்தானவர்களா? டெல்லி மக்களுக்கு நாங்கள் என்ன ஆபத்தானவர்களா? எங்களை ஏன் போலீஸ் அடிக்க வேண்டும்? நாங்கள் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக வரவில்லை. அமைதியான முறையில் போராட எங்களுக்கு உரிமையுள்ளது. நாங்கள் அதன்படியே செல்வோம். நாங்கள் ஏன் இயல்பான வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எங்களால் வெயிலில் வேலை பார்க்கும் போது இங்கும் இருக்க முடியும். “எங்களை சங்கடப்படுத்துவதன் மூலம் நீங்கள் எதுவும் பெற முடியாது,” என அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

டுவிட்டரில் ஆதரவு

விவசாயிகள் போராட்டத்திற்கு டுவிட்டரிலும் ஆதரவு பெருகியுள்ளது. மத்திய அரசின் கீழ் இருக்கும் டெல்லி போலீசின் நடவடிக்கையை கடுமையாக டுவிட்டர் வாசிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இன்று உலகம் முழுவதும் வன்முறையில்லா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, மறுபுறம் நம்முடைய போலீஸ் உரிமைக்காக போராடும் விவசாயிகளை வன்முறையின் மூலம் விரட்டுகிறது என கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. “தேர்தல் நேரங்களில் ஆசைவார்த்தை கூறும் வகையிலான வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு, இப்போது கண்ணீர் புகைக்குண்டுகள் மூலம் விவசாயிகள் விரட்டப்படுகிறார்கள்,” எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இப்பிரச்சனையை சரிசெய்ய மத்திய அரசும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. விவசாயிகள் தரப்பிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளார். அப்போது, விவசாயிகளின் 9 கோரிக்கைகளில் 7 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.