அதிருப்தி எம்எல்ஏக்களை சமாளிக்க கர்நாடக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்: முதல்வர் குமாரசாமி முடிவு
கர்நாடகாவில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி கடந்த மே மாதம் ஆட்சி அமைத் தார். இந்தக் கூட்டணி ஆட்சியில் அமைச்சரவை பகிர்வு, துறைப் பங்கீடு, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ், மஜத தலைவர்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
இதனிடையே, பெலகாவியைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் ஜார்கிஹோளி தலைமை யில் 22 எம்எல்ஏக்கள் கர்நாடக அரசுக்கு எதிராக மகாராஷ்டிரா வில் முகாமிட்டனர். அமைச்சரவை யில் இடம் அளிக்காவிட்டால் பாஜகவில் சேரப் போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம், கர்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புமாறு குமாரசாமிக்கு அழுத்தம் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து குமாரசாமி தனது தந்தை தேவகவுடாவுடன் ஆலோசனை நடத்தினார். அப் போது, அரசுக்கு எதிராக அதிருப்தி யில் உள்ள எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து முதல்வர் குமார சாமி கூறுகையில், “விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். இது குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மற்றும் மஜத தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். வரும் 10-ம் தேதி அல்லது 12-ம் தேதி புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறலாம்” என்றார்.