ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதில் அரசு மற்றும் விமானப்படைக்கு எந்த தொடர்பும் இல்லை – விமானப்படை தளபதி
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட்’ நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரர் நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரர் நிறுவனமாக இணைப்பதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தவிர எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் இந்திய அரசு தரவில்லை என கடந்த மாதம் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியிருந்தார்.
இது அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான மோதலை மேலும் அதிகரித்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும் இந்த ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என மத்திய அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் மற்றும் ரபேல் விமானங்கள் குறித்து விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ரபேல் ஒப்பந்தத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் ஒரு சிறந்த விமான தொகுப்பை பெறுகிறோம். ரபேல் ஒரு சிறந்த போர் விமானம். துணைக்கண்டத்துக்கு அது வரும்போது, ஆட்டத்தையே மாற்றியமைக்கும் ஒரு கருவியாக அது இருக்கும்.
இந்த ஒப்பந்தத்துக்கான இந்திய பங்குதாரர் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தை டசால்ட் நிறுவனம் தேர்ந்தெடுத்து உள்ளது. இதில் அரசுக்கோ, இந்திய விமானப்படைக்கோ எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.