பிரதமர் மோடிக்கு ஐ.நா.வின் உயரிய விருது
சர்வதேச அளவில் சுற்றுச்சூழலை சிறந்த முறையில் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு ஐ.நா.வின் சார்பில் 2005–ம் ஆண்டு முதல் ‘பூமியின் சாம்பியன்’ (சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்) என்னும் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதில் அரசுகளுக்கு வழங்கப்படும் 2018–ம் ஆண்டுக்கான விருதுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பை ஏற்படுத்தியது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை 2022–ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவது உள்ளிட்ட 6 நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி இந்த விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உலக அளவில் முயற்சி மேற்கொண்டு வருவதற்காக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரானும் பூமியின் சாம்பியன் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
இதேபோல் உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ள கொச்சி விமான நிலையத்துக்கு ‘சிறந்த தொழில்முனைவோர் நோக்கு’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி, பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் விருது வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது.
இந்தியாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் விழாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் விருதை வழங்கி கவுரவித்தார்.
விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:–
எனது அரசின் கொள்கைகளின் ஆணி வேரே தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்குவதுதான். பருவ நிலையும், இயற்கை பேரழிவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. பருவ நிலையை நாம் கலாசாரத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளவிட்டால் இயற்கை பேரிடரை நம்மால் தடுத்திட இயலாது.
விவசாயம் மற்றும் தொழிற் கொள்கைகள் முதல் வீடுகள் கட்டுவது, கழிவறைகள் அமைப்பது என அனைத்திலும் தூய்மையான சுற்றுச்சூழல் அமைந்திட வேண்டும். அதை எனது அரசு இந்த திட்டங்கள் அனைத்திலுமே நிறைவேற்றி வருகிறது. எங்களுடைய இந்த உறுதியான நிலைப்பாட்டால் நாட்டில் சுற்றுச்சூழல் மேம்பட்டு வருகிறது.
எனது அரசு மாசு அடர்த்தி வெளியேற்றத்தை அடுத்த 2 ஆண்டுகளில் 20–25 சதவீதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. அதேபோல் 2030–ம் ஆண்டுக்குள் 30–35 சதவீதம் வரை குறைக்க திட்டமிட்டு இருக்கிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை 2022–ம் ஆண்டுக்குள் நாட்டில் முற்றிலுமாக ஒழித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய மக்கள் எப்போதுமே இயற்கைக்கு மதிப்பளித்து வந்துள்ளனர். அது இந்திய சமூகத்தின் அங்கமாகவும் இருக்கிறது. எனது அரசு தூய்மை விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் மக்களின் குணாதிசயங்களை மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளது.
தங்களின் உயிரை விட மேலாக மரங்களை கருதும் காடுகளில் வாழும் இந்திய பழங்குடியின மக்கள், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் மீனவர்கள், பருவகாலத்துக்கு ஏற்ப அதனுடன் வாழ்க்கையை பிணைத்துள்ள விவசாயிகள் என இயற்கையுடன் இணைந்து வாழும் எங்களது மக்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன்.
மேலும் மரங்களை தெய்வமாக கருதி வழிபடும் இந்திய பெண்களுக்கு வழங்கப்பட்ட கவுரவமாகவும் இதை எண்ணுகிறேன். ஏனென்றால் மறு பயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகியவை அவர்களது வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது.
இந்தியர்கள் எப்போதுமே இயற்கையை உயிருள்ள ஒன்றாகவே மதித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்தியர்கள் ஒவ்வொரு தினமும் ஈடுபட்டு வருகின்றனர். 125 கோடி இந்தியர்களால்தான் எனக்கு இந்த விருது சாத்தியமாகி உள்ளது. எனவே நாட்டு மக்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.