Breaking News
சபரிமலை கோவிலுக்கு செல்ல நவம்பர் 16-ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இன்றி பெண்கள் உள்பட அனைத்து பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு தீர்ப்புக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நந்தன்கோட்டில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தேவஸ்தான தலைவர் பத்மகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய விருப்பம் இல்லாத நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அப்படியே அமல்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் முதல் பெண்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் கூடுதலாக 600 கழிப்பறைகளும், ஓய்வறைகளும் கட்டப்படும். மழை வெள்ளப்பெருக்கின் போது பம்பையை கடந்து சன்னிதானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனை கருத்தில் கொண்டு பம்பை மலை உச்சி முதல் கணபதி கோவில் வரை ரூ.25 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்.

கேரளாவில் தற்போது மழை வெள்ள சேத பணிகள் நடந்து வருவதாலும், பெண்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது இருப்பதாலும் இம்மாதம் 17-ந்தேதி நடைபெறும் ஐப்பசி மாத பூஜைக்கு பெண்களை அனுமதிக்க வாய்ப்பு இல்லை.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று சபரிமலைக்கு வரும் பெண்களை நாங்கள் தடுக்கவும் மாட்டோம்.

பெண்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து முடித்த பிறகு வருகிற மண்டல, மகர விளக்கு சீசன் முதல் சபரிமலை தரிசனத்திற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவர்.

அதாவது அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் சபரிமலைக்கு பெண்கள் வந்து அய்யப்பனை தரிசிக்கலாம்.

மேலும் சபரிமலைக்கு வரும் பெண்களின் வசதிக்காக ரூ.125 கோடியில் 10 ஆயிரம் ஓய்வு மையங்கள் கட்டப்படும். பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் கட்டப்படும். இதற்கான பணிகள் மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு பெற்றதும் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள மந்திரிசபை கூட்டம் திருவனந்தபுரம் தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதே அரசின் கடமை. அதனை நிறைவேற்றுவோம். சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதனை திறம்பட அரசு நிறைவேற்றும். சபரிமலை தரிசனத்திற்கு செல்ல ஏராளமான பெண்களுக்கு விருப்பம் உள்ளது. சன்னியாசி சமூகத்தில் உள்ள பெண்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அரசு சிறப்பான திட்டங்களை வகுத்து திறம்பட அதனை செயல்படுத்தும்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதற்கிடையே சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக கேரளாவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பந்தளத்தில் நடைபெற்ற சரணகோஷ பேரணியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. கொச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது.

கோட்டயத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநில அரசின் வற்புறுத்தல் காரணமாக மேல்முறையீடு செய்யும் முடிவை தேவசம் போர்டு கைவிட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. பந்தளம் அரச குடும்பத்தினரை சந்தித்த பிறகு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா வெள்ளிக்கிழமை பந்தளத்தில் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டார்.

மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் சுப்ரீம் கோட்டில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லபள்ளி ராமசந்திரன் வலியுறுத்தி இருக்கிறார்.

பா.ஜனதா இளைஞர் அமைப்பு சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நடைபெற்ற இப்போராட்டத்தின்போது தேவசம் மந்திரியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று போராட்டத்தின்போது அவர்கள் வலியுறுத்தினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.