”மழை நேரத்தில் தவளைகள் கத்தும்” மோகன் பகவத் கருத்து பற்றி காங்கிரஸ் விமர்சனம்
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை விரைவாக கட்ட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்த நிலையில், மோகன் பகவத் கருத்தை கடுமையாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:- “ மழை நேரத்திலும் தேர்தல் சமயத்திலும் தவளைகள் ஒலி எழுப்பும். ஆனால், அனைத்து ஒலிகளும் உண்மையாக இருக்காது.
ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் கடவுள் ராமரை அவர்கள் மறந்து விடுவர். தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு மட்டுமே மீண்டும் ராமரை அவர்கள் நினைவு கொள்வர். பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ், குணம் என்னவென்றால்? பேச்சில் ராமராகவும், சிந்தனையில் நாதுராமாகவும் இருப்பர். பாரதீய ஜனதாவின் உண்மை முகம் இதுதான்.
ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி விவகாரத்தை பொறுத்தவரை, இந்த விஷயம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. தீர்ப்பு எப்படி வந்தாலும் அனைத்து தரப்பும் அதை ஏற்றுக்கொள்ளும், அரசும் தீர்ப்பை அமல்படுத்தும்” என்றார்.