நாளை மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர் தமிழக அரசு நடவடிக்கை
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக வருகிற திங்கட்கிழமை வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. குறிப்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, தேனி, கன்னியா குமரி) மிக கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மிக கன மழையை எதிர்கொள்ள என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு அவர் பிறப்பித்த உத்தரவுகள் விவரம் வருமாறு:-
* இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு கடலுக்குச் சென்றுள்ள அனைத்து மீனவர் களையும் தொடர்பு கொண்டு அவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப கடலோர மாவட்ட கலெக்டர்கள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.
* வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்ட ஆயத்த பணிகளை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக செல்லவேண்டும்.
* கனமழை காலங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கவேண்டியும், பெற்றோர் தங்களது குழந்தைகளை பத்திரமாக இருக்க அறிவுறுத்த வேண்டியும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான இடத்திற்கு அல்லது நிவாரண முகாம்களுக்கு செல்லவேண்டியும், நீர் நிலைகளிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளிலும் பொதுமக்கள் ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க வேண்டியும் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்கவேண்டும் போன்ற தகவல்களை தண்டோரா, கேபிள் டிவி, ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பு படையினர் மேடான பகுதிகளுக்கும், நிவாரண முகாம்களுக்கும் பாதுகாப்பாக அழைத்துச்சென்று தங்கவைப்பதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
* நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட உள்ள மக்களுக்கு போதிய உணவு, சுத்தமான குடிநீர், குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடர், மருந்துகள், சுகாதார வசதிகள், ஜெனரேட்டர், போர்வை மற்றும் துணிமணிகள் போன்றவற்றை உடனடியாக வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கவேண்டும்.
* நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட உள்ள மக்களுக்கு அங்கேயே மருத்துவ பரிசோதனைகள் செய்ய நடமாடும் மருத்துவ குழுக்களை ஏற்படுத்தவேண்டும்.
* பல்துறை அலுவலர்கள் கொண்ட 662 மண்டல குழுக்கள், பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவேண்டும்.
* 1,275 மாநில பேரிடர் மீட்பு படையினர், காவல்துறை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தயார் நிலையில் இருக்கவேண்டும்.
* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தரைத்தளத்தில் உள்ள ஜெனரேட்டர்கள் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்கும் வகையில், அவற்றினை உயரமான இடத்திற்கு மாற்றி தயார் நிலையில் வைக்கவேண்டும்.
* மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அந்த நீரை உடனடியாக வெளியேற்றவேண்டும்.
* 70 சதவீதத்துக்கு கூடுதலாக நிரம்பியுள்ள நீர்நிலைகளை தீவிரமாக கண்காணிக்கவேண்டும்.
* மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால், தனி கவனம் செலுத்தி அந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
* மாநகராட்சிகளால் பராமரிக்கப்படும் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் உட்புகாமல் இருக்கும் வகையில், சுரங்கப் பாதைக்கு வெளியே சாலையின் குறுக்கே சிறிய மேடுகள் அமைக்கவேண்டும். இந்த தடுப்புகளை மீறி நீர் உட்புகுந்தால், அந்த நீரை வெளியேற்றும் வகையில் உயர் திறன் கொண்ட டீசல் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
* கீழே விழும் மரங்களை உடனடியாக அகற்ற இரவு பணிக்குழுக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.
* மழையினால் சேதம் அடையும் மின் கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்கவேண்டும்.
* கழிமுகப் பகுதிகள், பாலங்கள் மற்றும் சிறு பாலங் கள் ஆகியவற்றில் வெள்ள காலங்களில் ஏற்படும் அடைப்புகளை உடனடியாக சரிசெய்ய எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
* வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள், 24 மணி நேரமும் செயல்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு அவ்வப்போது அறிக்கைகள் சமர்ப்பிக்கவேண்டும்.
* வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழைநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை துரிதமாக முடிக்கவேண்டும்.
மேற்கண்ட உத்தரவுகளை எடப்பாடி பழனிசாமி பிறப்பித்து உள்ளார்.
மேலும் பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள தடுப்பு பராமரிப்பு பணிகளின் புகைப்படங்களையும் அதிகாரிகளிடம் காண்பித்து எடப்பாடி பழனிசாமி விளக்கினார்.