ரஷியாவிடம் இருந்து ரூ.37 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம்
வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவுடன் மிக நீண்ட காலமாக நெருங்கிய நட்பை இந்தியா பேணி வருகிறது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் 19–வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உயர்மட்டக்குழுவினருடன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார். பின்னர் இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று இந்தியா–ரஷியா உச்சி மாநாடு நடந்தது. டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வுகளில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். குறிப்பாக அரசியல் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதாரம், எரிசக்தி, தொழில் துறை, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றன.
இதைப்போல இருநாட்டு உயர்மட்டக்குழுக்களுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியா, ரஷியா குழுக்களுக்கு முறையே பிரதமர் மோடியும், புதினும் தலைமை தாங்கினர்.
இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரம் கோடி) மதிப்பில் அதிநவீன எஸ்–400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 250 கி.மீ. தொலைவில் வரும் போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கவல்ல இந்த ஏவுகணைகளின் திறனை 400 கி.மீ. தொலைவு வரை அதிகரிக்க முடியும்.
இந்திய வான்பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் வாங்கப்படும் இந்த ஏவுகணை அமைப்பில், ஒரு பன்முக செயல்பாடு கொண்ட ராடார், எதிரி ஏவுகணைகளை தானாகவே கண்டுபிடித்து அழிக்கும் ஆயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணை போன்றவை அடங்கி இருக்கும். மேலும் இந்த ஏவுகணை அமைப்பானது ஒரே நேரத்தில் 100 வான் இலக்குகளை கண்டுபிடிப்பதுடன், அவற்றில் 6 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறனும் பெற்றதாகும்.
சீனா, பாகிஸ்தான் நாடுகளின் அச்சுறுத்தலை சந்தித்து வரும் இந்தியாவுக்கு, இந்த ஏவுகணை அமைப்பு மிகுந்த பலத்தை அளிக்கும். இந்த ஏவுகணை அமைப்பை சீன எல்லையை ஒட்டி நிறுவ இந்தியா திட்டமிட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறியதை தொடர்ந்து 2020–ம் ஆண்டுக்குள் இந்த ஏவுகணைகளை ரஷியா, இந்தியாவுக்கு வழங்கும்.
ரஷியாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை வாங்கினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க விடுத்த மிரட்டலையும் பொருட்படுத்தாமல், ரஷியாவுடன் இந்த ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் எஸ்–400 ஏவுகணை வாங்குவது உறுதியாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தை தவிர விண்வெளி ஆய்வு, அணுசக்தி, ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் இந்தியா–ரஷியா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன. புதின், மோடி ஆகியோர் முன்னிலையில் இருநாட்டு அதிகாரிகள் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இதில் முக்கியமாக விண்வெளிக்கு முதன் முறையாக மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு ரஷியா உதவுகிறது. இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனம் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதைப்போல இந்தியாவில் புதிதாக 6 அணுமின் திட்டங்களை ரஷியாவின் உதவியுடன் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் நேற்று கையெழுத்தானது.
மேலும் ரஷியாவின் பாஸ்அக்ரோ உர நிறுவனத்தில் இருந்து இந்திய பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.7,300 கோடி மதிப்பில் 20 லட்சம் டன் உர இறக்குமதிக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. இதைப்போல நிதி ஆயோக், தேசிய சிறுதொழில் கழகம் உள்ளிட்ட துறைகளிலும் ஒப்பந்தங்கள் நிறைவேறின. அத்துடன் ரஷியாவின் சைபீரியாவில் இந்திய கண்காணிப்பு மையம் ஒன்றை அமைக்கவும் முடிவானது.
இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதின் கூறுகையில், ‘இந்தியாவுடனான உறவுகளுக்கு ரஷியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இதில் நாங்கள் அதிக மதிப்பு வைத்துள்ளோம். இருநாட்டு உறவுகள் அதிக வேகத்தில் வளர்ச்சியடைகிறது. இந்த உச்சி மாநாட்டில் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தோம். எங்கள் வர்த்தக உறவு ஆண்டுக்கு 20 சதவீதம் உயர்ந்து வருகிறது’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘ரஷிய ஆயுதங்களை இந்தியாவுக்கு வினியோகிப்பதற்கு அப்பாலும் எங்கள் உறவு தொடர்கிறது. இருநாட்டு ராணுவ அமைச்சகங்கள் மற்றும் பிற அமைச்சகங்களுக்கு இடையே நாங்கள் தொடர்ந்து தொடர்புகளை பராமரித்து வருகிறோம். அணுசக்தியை அமைதிக்கு பயன்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். கூடங்குளத்தை தவிர்த்து இந்தியாவில் 12 அணு உலைகளை அடுத்த 20 ஆண்டுகளில் நாங்கள் நிறுவுவோம்’ என்றும் கூறினார்.
பின்னர் பிரதமர் மோடி கூறும்போது, ‘இந்தியா–ரஷியா இடையிலான உறவு தனித்துவமானதும், எல்லையற்றதும் ஆகும். எங்கள் உறவை வழக்கமான மற்றும் பாரம்பரிய எல்லைகளை தாண்டி கொண்டு சென்றுள்ளோம். ரஷியா எப்போதும் இந்தியாவுடன் தோளோடு தோள் நின்று வருகிறது. இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை 2025–ம் ஆண்டுக்குள் 30 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.16 லட்சம் கோடி) அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்’ என்று குறிப்பிட்டார்.
வேகமாக மாறிவரும் உலகில் இரு நாடுகளும் பல்துருவ முனைப்பை நம்புவதாக கூறிய பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பயங்கரவாத எதிர்ப்பில் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் அடங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் பல்வேறு அம்சங்களை வெளியிட்டு இருந்த அவர்கள், பயங்கரவாத எதிர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தனர்.
இது தொடர்பாக அந்த அறிக்கையில், ‘பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை இரு நாடுகளும் கண்டிப்பதுடன், எந்தவித இரட்டை நிலைப்பாடும் இல்லாமல் சர்வதேச பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்ப்பதன் தேவையை வலியுறுத்துகிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.