பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை, போராட்டத்தினை விளக்கும் தெரு ஓவியம் வெளியிடப்பட்டது
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் சோனாகாச்சி பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படுகிறது. இங்கு பாலியல் தொழிலாளர்கள் அதிகளவில் தொழில் செய்து வருகின்றனர்.
ஆசியாவிலேயே மிக பெரிய பாலியல் தொழிலுக்கான பகுதியாக உள்ள இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் அஹிரிதோலா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள 300 அடி நீள சாலை ஒன்றில் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் போராட்டத்தினை வெளிப்படுத்தும் வகையிலான தெரு ஓவியம் ஒன்று வரையப்பட்டு உள்ளது.
அஹிரிதோலா ஜுபக்பிருந்தா துர்கா பூஜை குழு முயற்சியுடன் இந்த ஓவியம் வரையப்பட்டு உள்ளது.
இதுபற்றி அதன் செயல் தலைவர் உத்தம் சஹா கூறும்பொழுது, பாலியல் தொழிலாளர் ஒருவரின் வாழ்க்கை மற்றும் போராட்டம் ஆகியவற்றை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வினை பரப்புவதே எங்களது நோக்கம் என கூறினார்.
இந்த ஓவியத்தினை வரைந்தவர்களில் ஒருவரான மனாஸ் ராய் கூறும்பொழுது, கடத்தலாலோ அல்லது குடும்பத்தினை நடத்தவோ ஒரு பெண் பாலியல் தொழிலாளியாகிறார். அவரும் ஒரு தாய். தனது குழந்தைகளை மற்றும் குடும்பத்தினை பராமரிக்கிறார். துர்கை வடிவில் ஒரு பெண்ணை கொண்டாடும்பொழுது வேறுபாடு இருக்காது என கூறுகிறார்.
எங்களது வாழ்வு மற்றும் போராட்டத்தினை வெளிப்படுத்தும் விசயத்தினை பூஜை குழு எடுத்ததில் உண்மையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என தர்பார் மகிளா சமன்வாயா குழுவை சேர்ந்த சந்தன தாஸ் கூறியுள்ளார்.
இந்த குழுவில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்த பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.