மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்க கூடாது மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது தமிழக வளர்ச்சி சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நரேந்திர மோடியிடம் கொடுத்த மனுவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* மறைந்த தமிழக முதல்- அமைச்சர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மறைந்த தமிழக முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு ‘புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில் நிலையம்’ என பெயர் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* 14-வது நிதி ஆணையத்தின் ஒதுக்கீட்டின்படி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய 2017-18-ம் ஆண்டுக்கான செயல்திறன் மானியம் ரூ.560.15 கோடி மற்றும் 2018-19-ம் ஆண்டு முதல் தவணையாக வழங்கவேண்டிய அடிப்படை மானியம் ரூ.1,608.03 கோடியை விரைந்து வழங்குமாறு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின துறைக்கு உத்தரவிட வேண்டும்.
* மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான ஒப்புதல் வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் தான் இந்த ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான இயல்பான பணிகளை தொடங்கமுடியும்.
* எங்களுடைய கோரிக்கையை ஏற்று நீங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகம் வந்தீர்கள். அப்போது சென்னையின் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1,500 கோடி சிறப்பு ஒதுக்கீட்டில் தருவதாக உறுதி அளித்தீர்கள். ஆனால் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ததில், அதற்கான நிதி கூடுதலாக தேவைப்படுகிறது. அதன்படி அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்வாய் அமைக்க ரூ.440 கோடி நிதி தேவைப்படுகிறது.
மேலும் கொசஸ்தலை ஆற்றில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்வாய் அமைக்க ரூ.2,518 கோடியும், கோவளம் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்வாய் அமைக்க ரூ.270 கோடியும், எந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.100 கோடியும், நீர்நிலைகளை மறுசீரமைப்பதற்கு ரூ.200 கோடியும், 2015- 16-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு ரூ.917.84 கோடி என மொத்தம் ரூ.4,445.84 கோடி நிதியினை சென்னை மாநகரத்தின் நிரந்தர வெள்ள தடுப்பு கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
* ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியில் (ஜி.எஸ்.டி.) வசூலாகும் தொகையில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் இலக்கு கோட்பாட்டின்படி பகிர்ந்துகொள்கின்றன. அந்த வகையில் 2017-18 நிதி ஆண்டு வரையிலான நிலவரப்படி தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.5,426 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. எனவே நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. நிலுவை தொகையான ரூ.5,426 கோடி மற்றும் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான நிலுவை தொகையையும் உடனடியாக விடுவிக்க நிதி அமைச்சகத்துக்கு தகுந்த ஆணைகளை பிறப்பிக்க வேண்டும்.
* காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு முரணானது. மேகதாது அணை கட்டுவதற் கான சாத்தியக்கூறு அறிக்கையை வைத்து பார்த்தால் காவிரியை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் பங்கும் பாதிக்கப்படும். மேலும் தமிழகத்தின் உரிமையும் பெரிதும் பாதிக்கப்படும். எனவே மேகதாது அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கையை அடுத்த கட்டத்துக்கு செல்லாத வகையில் நிறுத்தி வைக்குமாறு மத்திய நீர் ஆணையம் அல்லது சம்பந்தப்பட்ட பிற துறைகளுக்கு உத்தரவிடவேண்டும். மேலும் தமிழகம் மற்றும் காவிரி படுகையில் உள்ள மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கோ, வேறு எந்த திட்டத்துக்கோ கர்நாடகத்துக்கு எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது.
* ரூ.17,600 கோடி மதிப்பீட்டில் காவிரி நீர் பாசன மேம்பாடு மற்றும் மறுவாழ்வு திட்டத்துக்கு உரிய அனுமதி வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்துவதோடு, நிதியும் வழங்க வேண்டும்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித்தொகை திட்டத்தில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். இந்த திட்டத்தை மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீத பங்களிப்புடன் மறுகட்டமைப்பு செய்ய சமூக நீதி அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டும். மேலும் 2017-18 நிதி ஆண்டு வரையிலான இந்த திட்ட நிலுவைத்தொகையான ரூ.985.78 கோடியை உடனே தமிழகத்துக்கு வழங்க சமூக நீதி அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும்.
* புயலினால் காணாமல் போகும் மீனவர்களை கடற்படை, கடலோர காவல் படை மற்றும் விமானப்படையினர் தேடி, மீட்டு வருவதற்கு ஏதுவாக கன்னியாகுமரி அல்லது குளச்சலில் புதிதாக நிரந்தர கடற்படை தளம் அமைக்க வேண்டும்.
* மீனவர்களின் பாதுகாப்புக்காக புயல், சுனாமி மற்றும் பேரலைகள் வந்தால் எச்சரிக்கும் கருவி, உயர் அலைவரிசை தகவல் தொடர்பு சாதனம், செயற்கைக்கோள் போன், பேரிடர்களை முன்கூட்டியே தெரிவிக்கும் கருவிகள், செயற்கைக்கோள் மூலமாக மீன்பிடி படகுகளை கண்டு பிடிக்கும் கருவிகள், வானிலை ஆய்வு மையம் மற்றும் அகில இந்திய வானொலி இணைந்து கடல் சார் தகவல் சேவைகளை ஆண்டு முழுவதும் வழங்கும் வானொலி (ரேடியோ) அலைவரிசை தொடங்க வேண்டும்.
* கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், முட்டம், குளச்சல் மற்றும் தேங்காப்பட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இந்த 4 துறைமுகங்களில் ஏதாவது ஒன்றில், அதிக படகுகளை நிறுத்தும் வசதி, சேமித்து வைத்தல், தர ஆய்வு செய்யும் வசதி உள்பட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த துறைமுகம் இந்த தருணத்தில் தேவைப்படுகிறது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மீன்பிடி தொடர்பான கட்டுமானங்களை நிறுவுவதற்கு ரூ.400 கோடி ஒதுக்க வேண்டும்.
* 14-வது நிதி ஆணையத்தின் நியாயமற்ற செயல்பாடுகளுக்காக சிறப்பு உதவியாக ரூ.2 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு இழப்பீடாக வழங்கவேண்டும். பருவநிலை மாற்றம் தொடர்பான ரூ.4,544.77 கோடி மதிப்பிலான 11 திட்டங்கள் நிதி ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் தேசிய வழிகாட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விரைவாக நிதி ஒதுக்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும்.
* தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களில் வரவேண்டிய மத்திய அரசின் பங்குத்தொகையான ரூ.8,699 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்.
* தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு விருதுநகரில் புதிதாக அரசு பல் மருத்துவ கல்லூரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய பல் கவுன்சிலிடம் இருந்து ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொள்வதற்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் 2019-20-ம் கல்வி ஆண்டு முதல் விருதுநகரில் அரசு பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
* மத்திய அரசு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு விதிகளை தளர்த்தி ஒப்புதல் வழங்க சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டும். மாவட்ட மருத்துவமனையை இணைத்து புதிதாக மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சேலம் உருக்காலையில் பயன்படுத்தாமல் உள்ள காலி இடத்தில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க ஆவன செய்யவேண்டும். பாதுகாப்பு அமைச்சகத்தை இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்துமாறு அறிவுறுத்தவேண்டும்.
பட்டாசு தொழிற்சாலையை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்து இருக்கும் 8 லட்சம் குடும்பத்தினரை காப்பாற்றும் வகையில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை விதியில் மாற்றம் செய்யுமாறு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
* ‘உடான்’ திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்துக்கு விமான போக்குவரத்து சேவையை தொடங்க விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டும். மேலும் சேலம்-சென்னை இடையே மாலை நேர விமானங்களையும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தென்னை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோவுக்கு ரூ.75.11 மத்திய அரசு அறிவித்துள்ளது. தென்னை வளர்ப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு இதனை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கிலோவுக்கு ரூ.105 ஆக உயர்த்தி வழங்க வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு செய்தால் விவசாயிகளின் வருமானம் உங்களின் தொலைநோக்கு திட்டப்படி இரண்டு மடங்காக உயரும்.
மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.