ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு மேனகா காந்தி வழக்கு தொடரவில்லை.. நிர்மலா சீதாராமன் விளக்கம்
ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு தடை கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக வெளியான தகவல்கள் வதந்தி என மற்றொரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
தமிழர்கள் கலாசாரத்தை மதிப்பதாக பிரதமர் மோடி கூறிய நிலையில், அவரது அமைச்சரவை சகாவான மேனகா காந்தி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டதாக நேற்று காலை ஒரு தகவல் பரவி வந்தது.
இந்த தகவல் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தப்பான தகவல் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேனகா காந்தியிடம் போனில் பேசினேன். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிராக அவர் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யவில்லை என்று கூறினார். டிவி சேனல்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அதேபோல பீட்டாவும் இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட் போனதாக வெளியான தகவலும் மறுக்கப்பட்டுள்ளது. பீட்டா ஒரு அறிக்கையில் இதை மறுந்துள்ளது.
அதேநேரம், இதுவரை உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தங்களது கருத்துக்களை கேட்காமல் ஜல்லிக்கட்டு தொடர்பான உத்தரவை பிறப்பிக்க கூடாது என்பது இவர்கள் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : ஒன்இந்தியா.காம்