சோயுஸ் ராக்கெட்டில் கோளாறு: அவசரமாக தரை இறங்கியது 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த விண்வெளி நிலையத்துக்கு ரஷிய விண்வெளி வீரர் அலெக்சி ஓவ்சினின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகிய இருவரும் புறப்பட ஏற்பாடு ஆகி இருந்தது.
அவர்கள் இருவரும் கஜகஸ்தான் நாட்டின் பைகானூர் காஸ்மோடிராமில் இருந்து சோயுஸ் ராக்கெட் மூலம் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்கள்.
ஆனால் அந்த ராக்கெட் புறப்பட்டு விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில், அதன் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த ராக்கெட் அவசரமாக கஜகஸ்தானில் திரும்பி வந்து தரை இறங்கியது.
அதில் பயணம் செய்த வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் ‘பேலிஸ்டிக்’ இறங்கு வாகனம் மூலம் பாதுகாப்பாக தரை இறங்கியதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ தெரிவித்தது.