பாலியல் புகார்: ‘மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு
பணித்தலங்களிலும், பிற இடங்களிலும் ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீப காலமாக பெண்கள் தைரியமாக புகார் கூறி வருகின்றனர். சர்வதேச அளவில் ‘மீ டூ’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக இப்படிப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன.
இதில் சினிமாத்துறையில் பணியாற்றும் ஏராளமான பெண்கள் ‘மீ டூ’ என்ற பெயரில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து வருகின்றனர். எனினும் அரசியல் துறையையும் இது விட்டு வைக்கவில்லை. அந்தவகையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இப்படி பாலியல் புகாரை துணிச்சலுடன் தெரிவிக்க வழிவகுத்திருக்கும் இந்த ‘மீ டூ’ இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் கூறுகையில், ‘பெண்களை மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடத்துவதை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. அப்படி இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். மாற்றத்தை கொண்டு வரும்பொருட்டு உண்மையை தெளிவாகவும், உரக்கவும் சொல்லும் நேரம் இது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
எனினும் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தையும் ராகுல் காந்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.