ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வுக்குழு நவம்பர் 30-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் – தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா குழுமம் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாகவும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா? என்பதை ஆராய தனி குழு அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், மேகாலயா மாநில ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
இதைத்தொடர்ந்து இந்தக் குழு கடந்த மாதம் தூத்துக்குடியிலும், சென்னையிலும் ஆய்வு மேற்கொண்டது. நீதிபதி தருண் தலைமையிலான குழுவுக்கு ஆய்வு மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் 6 வார கால அவகாசம் வழங்கி இருந்தது. விசாரணை தொடர்பாக பல்வேறு தரப்பினர் இந்த குழுவின் முன்பு ஆஜராகி வந்தனர்.
இந்த குழு மேலும் சிலரிடம் விசாரணை நடத்தவேண்டி உள்ளது. இதனிடையே வருகிற 30-ந் தேதியுடன் ஆய்வு குழுவின் விசாரணைக்கான அவகாசம் நிறைவடைகிறது. இதனால் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி தருண் தலைமையிலான குழு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார், நீதிபதிகள் ஜாவேத் ரஹீம், ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் நீதிபதி தருண் தலைமையிலான குழுவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் காலத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதி வரை நீட்டிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் அன்றைய தினம் இந்தக் குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் இந்த வழக்கின் மீதான விசாரணையை டிசம்பர் 10-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தனர்.