பாலியல் புகார் கூறிய பெண் மீது அவதூறு வழக்கு: மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்தார்
மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர், பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய காலத்தில் சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘மீ டூ’ இயக்கம் மூலம் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர். இதில் பிரியா ரமணி, கசாலா வகாப், ஷுமா ரகா, அஞ்சு பாரதி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்களும் அடங்குவர்.
இந்த புகார்களால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, சொந்த கட்சியான பா.ஜனதாவிலேயே எம்.ஜே.அக்பருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவிநீக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதைப்போல பத்திரிகையாளர்களும் எம்.ஜே.அக்பருக்கு எதிராக போராடி வருகின்றனர்.
ஆனால் தன் மீதான பாலியல் புகார்களை மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மறுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்ட அவர், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என விளக்கம் அளித்து இருந்தார். மேலும் தன்மீது பாலியல் புகார் கூறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி நேற்று அவர் பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது கோர்ட்டில் தனிநபர் குற்ற அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். எம்.ஜே.அக்பர் சார்பில் வக்கீல் சந்தீப் கபூர், இந்த மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘மனுதாரர் (எம்.ஜே.அக்பர்), இந்தியாவின் முதல் அரசியல் வாராந்திர பத்திரிகையை தொடங்கியவர். பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த அவர் மீது வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன், அவதூறு ஏற்படுத்தும் வகையில் பாலியல் புகார்கள் கூறப்பட்டு உள்ளன’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார்களால் மனுதாரரின் நன்மதிப்பு மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்பட்டது மட்டுமின்றி, சமூகம், குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் அவரது புகழுக்கு இழுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இவ்வாறு ஈடுசெய்ய முடியாத இழப்பையும், துயரத்தையும் ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடப்பட்டு இருந்தது.
இதற்கிடையே எம்.ஜே.அக்பர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் உள்ள அவரது வீட்டு முன் நேற்று இளைஞர் காங்கிரசார் கண்டன போராட்டம் நடத்தினர். அப்போது அவரது வீட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் சில தொண்டர்கள் போலீசாரின் தடுப்பு வேலிகளையும் மீறி மந்திரியின் வீட்டுக்கு செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மந்திரி எம்.ஜே.அக்பர் நேற்று முன்தினம் வெளியிட்ட விளக்கத்தை பா.ஜனதா ஏற்கிறதா? என கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ‘இதை கட்சி ஏற்கிறதா? இல்லையா? என்பது முக்கியம் அல்ல. அவர் தனது விளக்கத்தை அளித்து இருக்கிறார்’ என்று மட்டும் கூறினார்.