ராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகள் கூட்டணி
பா.ஜனதா ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. காங்கிரஸ், பா.ஜனதா இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என அறிவித்துவிட்டது. இந்நிலையில் பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாடி, இந்திய கம்யூனிஸ்ட், சிபிஎம் (எம்.எல்.), ராஷ்டீரிய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ரவிந்தர சுக்லா பேசுகையில், “மக்களுக்கு எதிரான அரசியல் அதிகாரங்களை தோற்கடிக்கவே இக்கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளது. தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்களின் வளர்ச்சிக்காக பணியாற்றியது கிடையாது. எங்களுடைய கட்சி 200 தொகுதிகளில் 29 தொகுதிகளில் போட்டியிடும். விரைவில் சீட் பங்கீடு மற்றும் பிற நடைமுறை பணிகளுக்காக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறும்,” என்றார்.
ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வரும் 22 முதல் 28 வரையில் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார் ரவிந்தர சுக்லா. தனியார்கள் பயனடையும் வகையில் மோடி அரசு தேச பாதுகாப்புடன் விளையாடுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.