ஆன்-லைனில் முன்பதிவு செய்தவருக்கு செல்போனுக்கு பதிலாக செங்கல் வந்ததால் அதிர்ச்சி போலீசார் விசாரணை
அவுரங்காபாத்தை சேர்ந்த கஜானன் காரத் என்பவர் செல்போன் வாங்குவதற்காக பிரபலமான ஆன்-லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் கடந்த 9-ந் தேதி முன்பதிவு செய்தார். இதற்கான தொகை ரூ.9,134-ம் ஆன்-லைன் மூலமாகவே செலுத்தினார்.
அந்த ஆன்-லைன் நிறுவனத்திடம் இருந்து கஜானன் காரத்துக்கு கடந்த 14-ந் தேதி ‘பார்சல்’ ஒன்று வந்தது. அதை திறந்து பார்த்தபோது அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அதற்குள் செல்போனுக்கு பதிலாக செங்கல் துண்டு ஒன்று இருந்தது.
உடனே அவர், தனக்கு ‘பார்சல்’ கொண்டு வந்த கூரியர் நிறுவனத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார். ஆனால் பார்சல் வினியோகிக்கும் பொறுப்பு மட்டுமே தங்களுக்கு உரியது எனவும், அதில் இருக்கும் பொருட்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் அவர்கள் கூறிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கஜானன் காரத் தற்போது போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்-லைன் மூலம் செல்போன் முன்பதிவு செய்தவருக்கு செங்கல் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அவுரங்காபாத் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.