போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கலில் குவிந்த போராட்டக்காரர்கள் கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தினார்கள்.
இதை பார்த்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். 50 முதல் 10 வயது வரை உள்ள பெண்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவிலுக்கு செல்லவில்லை. போராட்டத்தினால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து சபரிமலை பாதுகாப்பு கமிட்டி 12 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். ஐ.ஜி ஸ்ரீஜித் தலைமையில் இரண்டு பெண்களுக்கும் பலத்த பாதுகாப்பு தரப்பட்டது. இதுவரை எந்த பெண்களும் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், 2 பெண்கள் பயணம் செய்தனர். தலைகவசம் உள்ளிட்ட காவல்துறையின் பாதுகாப்பு உபகரணங்கள் பெண்களுக்கும் வழங்கப்பட்டன.
பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து போலீஸார் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீஸார் அந்தப் பெண்களை பாதுகாப்பாக ஒரு இடத்தில் தங்க வைத்தனர். ஆனால், ஒரு பக்கம் பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது
இதுகுறித்து மேலும் அறிக்கை வெளியிட்ட கேரள மாநிலத்தின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்தரன்,
சபரிமலை கோவில் போராட்ட குணத்தை காட்டும் இடமல்ல ; பெண்களை திருப்பி அனுப்புகிறது கேரள அரசு .கேரளா அரசு சபரிமலை பகுதியை மோதல் மண்டலமாக மாற்றியமைக்க விரும்பவில்லை என அரசு கூறி உள்ளது. பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசாங்கம் உறுதியளிப்பதாக அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.கேரள அரசின் நோக்கம் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர போராட்ட எண்ணமுடையவர்களை அனுமதிப்பதல்ல.
அந்த இரு பெண்களுள் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர், மற்றொருவர் செய்தியாளர்; இது லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வை பாதிக்கும் என அமைச்சர் சுரேந்திரன் கூறி உள்ளார்.
சபரிமலையில் காவல்துறையினர் பிரச்சினையை ஏற்படுத்தமாட்டார்கள். பக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம் என – ஐ.ஜி.ஸ்ரீஜித் கூறி உள்ளார்.
ஆந்திரம் மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராக கவிதா பணியாற்றி வருகிறார். செய்தியாளர் கவிதாவுடன் செல்வது பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.