சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா! போலீஸ் மீது அரசு காட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடரும் நிலையில் இன்று ஆந்திரா பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா செல்ல முயற்சி செய்தனர். பக்தர்களின் போராட்டம் காரணமாக அவர்களை கேரளா மாநில அரசு திரும்பி அனுப்பியது. முதல்கட்டமாக பத்திரிக்கையாளர் கவிதாவுடன் கேரளா மாநில அய்யப்ப பக்தர் இருமுடிகட்டி செல்கிறார் என முதல்கட்ட தகவல் வெளியாகியது. பின்னர் கவிதாவுடன் செல்வது ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதனையடுத்து பல்வேறு தரப்பில் அரசு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
கேரள மாநிலத்தின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்தரன் வெளியிட்ட அறிக்கையில், அரசின் நோக்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே. சமூக செயற்பாட்டாளர்களுக்கு கிடையாது. எனவே, போராட்டக்காரர்களுக்கும், செயற்பாட்டாளர்களும் ஒரு வேண்டுகோள். சபரிமலை போராடுவதற்கான இடம் அல்ல. சபரிமலைக்கு வந்து உங்கள் போராட்ட எண்ணங்களையும், வலிமையையும் வெளிப்படுத்த வேண்டாம்.
சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்களில் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர், மற்றொருவர் பத்திரிகையாளர். சபரிமலை விஷயம் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெவித்தார்.
ரஹானாவின் வீட்டில் தாக்குதல்
இதற்கிடையே கொச்சியில் உள்ள ரஹானாவின் வீட்டில் மர்மநபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். அவருடைய வீட்டில் கற்கள் வீசப்பட்டுள்ளது.
நெருப்புடன் விளையாடுகிறது
சபரிமலை கோவில் பகுதியில் பதற்றம் தொடரும் நிலையில் “நெருப்புடன் கேரளா அரசு விளையாடுகிறது,” என காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரும்பி செல்லமாட்டேன்
இருபெண்களையும் திருப்பி அனுப்ப கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் ரஹானா, திரும்ப மாட்டேன் என கூறியுள்ளார். போலீசார் பெண்கள் இருவருடனும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். அப்போது திரும்ப போவது இல்லை என ரஹானா அடம்பிடித்ததாக இந்துஸ்தான் டைமஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் 41 நாட்கள் விரதம் இருந்தது போன்று நானும் விரதம் இருந்து உள்ளேன். என்னை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் மீது காட்டம்
“பாதுகாப்பு வழங்குவதற்கு முன்னதாக யாரென்பதை போலீஸ் அடையாளம் காண வேண்டும்,” என அமைச்சர் சுரேந்தரன் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் நோக்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என்று கூறியுள்ளார்.