சேவல் சண்டைக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக் கோரிய மனுவை 2 நாளில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் அண்ணா நகரைச் சேர்ந்த ஏ.ஜோசப், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் ஜல்லிக் கட்டுபோல பாரம்பரியமான விளை யாட்டு சேவல் சண்டை. தஞ்சாவூர் விளார் அய்யனார் கோயில் அருகே ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழாவையொட்டி தஞ்சை வீர விளையாட்டு வெற்றுக்கால் சேவல் கலை விழா நடத்தப்படும். இவ்விழாவில் சேவல் சண்டை நடைபெறும்.
இங்கு பல ஆண்டுகளாக சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சேவல் சண்டையை பிப். 11, 12 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டு அனுமதி கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் ஜன. 20-ம் தேதி மனு அளித்தோம். ஆனால் இதுவரை அனுமதி தரவில்லை. சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். அனுமதி வழங்காவிட்டால், சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல் இனம் அழியும் அபாயம் ஏற்படும். என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலை யரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘சேவல் சண்டைக்கு அனுமதி கோரி மனுதாரர் அளித்துள்ள மனுவை 2 நாளில் பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
நன்றி : தி இந்து தமிழ்