சபரிமலை அய்யப்பன் கோயிலை போராட்டக்களமாக்க ஆர்எஸ்எஸ் முயற்சி- பினராயி விஜயன்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு, பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும், பல்வேறு அமைப்பினரின் எதிர்ப்புக்கு ஆளாகியது. அவர்கள் கேட்டு, பெண்களை அனுமதிக்க மறுத்து தொடர் போராட்டங்களில் குதித்தனர்.
தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 25-க்கும் மேற்பட்ட மறு ஆய்வு மனுக்கள் தாக்கலாகி, அவை நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் ஐப்பசி மாத வழிபாட்டுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, கடந்த 17-ந் தேதி திறக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு எடுத்தது. அதைத் தொடர்ந்து சபரிமலை அய்யப்பனை தரிசிக்க முதல் நாளில் வந்த பெண்கள், வழியிலேயே நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
போராட்டகாரர்களால் சபரிமலை சன்னிதானம் அருகே சென்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அய்யப்பன் கோவிலை மூடுவோம் என தந்திரி எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கு பதற்றம் நீடித்தது. பக்தர்களின் சரண கோஷங்கள் நிரம்பிய சபரிமலை அய்யப்பன் கோவில், போராட்ட களமாக மாறியது.
பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட 4 இடங்களில் போலீஸ் தடை உத்தரவு பிறப்பித்தது. பதற்றம் நீடித்ததால் 22-ந் தேதி வரை தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்தும் என முன்பே கேரள அரசு தெளிவுபடுத்தி உள்ளது. அரசாங்கம் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளது. அரசு அல்லது போலீஸ் பக்தர்களைத் தடுக்க முயலவில்லை. ஆர்.எஸ்.எஸ் சபரிமலை கோவிலை ஒரு போர்க்களமாக உருவாக்க முயற்சித்தது.
போராட்டக்காரர்கள் ‘வாகனங்களை சோதனை செய்வது, பெண் பக்தர்கள் மற்றும் ஊடக நபர்களைத் தாக்க முயன்றனர். கேரள வரலாற்றில் ஊடகங்கள் மீது காட்டப்பட்ட இந்த வகையான அணுகுமுறை முதல் முறையாக இருந்தது. இருப்பினும் சபரிமலை கோவிலில் சட்டம் ஒழுங்கு தோல்வி அடையவில்லை என கூறினார்.