Breaking News
சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தடை

சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தடை விதித்தது.

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நீடித்து வந்த பனிப்போரில் மத்திய அரசு கடந்த 23-ந் தேதி அதிரடியாக களம் இறங்கியது.
அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுப்பில் அனுப்பியது. தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. சவுத்ரி பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

அதைத் தொடர்ந்து இடைக்கால இயக்குனராக எம். நாகேஸ்வரராவை நியமித்தது.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அலோக் வர்மா, அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 24-ந் தேதி வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தரப்பில் முறையிடப்பட்டது.

அதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு ஏற்றது. இந்த வழக்கில் 26-ந் தேதி (நேற்று) விசாரணை நடத்தப்படும் என அறிவித்தது.

அதன்படி அலோக் வர்மாவின் வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில், வழக்குதாரர் அலோக் வர்மா சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன் ஆஜராகி வாதிட்டார். அவர், “பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட தேர்வுக் குழுவின் ஒப்புதலின் பேரில் 2 ஆண்டுகள் பதவி வகிக்கலாம் என்றுதான் சி.பி.ஐ. இயக்குனர் நியமிக்கப்பட்டார். இந்த பதவிக்காலத்தை எப்போது வேண்டுமானாலும் முறித்துக்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது” என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் 1997-ம் ஆண்டு வினித் நாராயண் வழக்கின் தீர்ப்பையும், சி.பி.ஐ. அமைப்பை நிறுவியது தொடர்பாக டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களையும் சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில் நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்ததற்கு தடை விதிக்க வேண்டும் என்ற முறையீடு, விசாரணையின்போது அலோக் வர்மா தரப்பில் எடுத்து வைக்கப்படவில்லை.

மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலும், மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகி வாதாடினர்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:-

* மத்திய மந்திரிசபை செயலாளரின் ஆகஸ்டு 24-ந் தேதியிட்ட கடிதத்தின் (குறிப்பின்) படி, சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் இன்றிலிருந்து (நேற்றிலிருந்து) 2 வார காலத்தில் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.

இந்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

* சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் முக்கிய முடிவுகளையோ, எந்தவிதமான கொள்கை முடிவுகளையோ எடுக்கக்கூடாது. சி.பி.ஐ. செயல்படுவதற்கு தேவையான, வழக்கமான பணிகளை மட்டுமே அவர் செய்ய வேண்டும்.

* அக்டோபர் 23-ந் தேதி முதல் நேற்று வரையில், நாகேஸ்வரராவ் எடுத்துள்ள முடிவுகளை (விசாரணைகள் மாற்றம், விசாரணை அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்டவை) மூடி முத்திரையிட்ட உறையில் அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதைப் பரிசீலித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

* அலோக் வர்மா வழக்கு தொடர்பாக மத்திய அரசும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அலோக் வர்மா வழக்கில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அலோக் வர்மா வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததை செல்லாது என்று அறிவிக்க கோரியும், அலோக் வர்மாவை சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக பின்னர் பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ‘காமன்காஸ்’ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், சி.பி.ஐ.க்கும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.