அலோக் வர்மாவை நீக்கியதற்கு கண்டனம்: டெல்லி சி.பி.ஐ. அலுவலகம் முன் போராட்டம் – ராகுல்காந்தி கைது
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் லஞ்சப் புகார் கூறி மோதலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது. பின்னர் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு உள்ளன. குறிப்பாக ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்காகவே சி.பி.ஐ. இயக்குனர் மாற்றப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த நிலையில் அலோக் வர்மா நீக்கத்தை கண்டித்தும், அவரை மீண்டும் அந்த பொறுப்பில் நியமிக்க வலியுறுத்தியும் நேற்று டெல்லியில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதற்காக கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் லோதி சாலையில் உள்ள தயாள் சிங் கல்லூரியில் குவிந்த காங்கிரசார், அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதில் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், அகமது படேல், மோதிலால் வோரா, வீரப்ப மொய்லி, ஆனந்த் சர்மா உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும், நூற்றுக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர். மேலும் லோக்தந்திரிக் ஜனதாதளம் கட்சித்தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த நதிமுல்ஹக் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் பதாகைகளுடன் சென்றனர். சி.பி.ஐ. அமைப்பை கூண்டுக்குள் அடைத்திருப்பது போன்று சித்தரிக்கும் பதாகைகளை சிலர் வைத்து இருந்தனர். இந்த பேரணியை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
உடனே ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் அங்கே தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அப்போது கூட்டத்தினரிடையே பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அப்போது அவர், சி.பி.ஐ., தேர்தல் கமிஷன், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பிரதமர் சீரழிப்பதாக கண்டனம் தெரிவித்தார்.
இதைப்போல அலோக் வர்மா நீக்கப்பட்டது சட்ட விரோதம் எனக்கூறிய அசோக் கெலாட், சி.பி.ஐ. இயக்குனரை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இணைந்தே பதவி நீக்கம் செய்ய முடியும் என கூறினார். எனவே இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்த பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காங்கிரசாரின் இந்த போராட்டத்தால் லோதி சாலை, பீஷ்ம பிதாமக் மார்க், சாய்பாபா சவுக் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மற்றும் காங்கிரசாரை போலீசார் கைது செய்து லோதி சாலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்துக்குப் பின் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அருகே ராகுல் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரபேல் ஒப்பந்தத்தில் தன்னுடைய ஊழலை மறைப்பதற்காக, பதற்றத்தில் சி.பி.ஐ. இயக்குனருக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து இருக்கிறார். உண்மை என்னவென்றால் பிரதமர் மோடி ஊழலில் ஈடுபட்டுள்ளார். ரபேல் ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானியின் பையில் ரூ.30 ஆயிரம் கோடியை பிரதமர் போட்டு உள்ளார். ஆனால் விவசாயிகளின் கடனில் இருந்து ஒரு ரூபாய் கூட அவர் தள்ளுபடி செய்யவில்லை.
நாட்டின் காவலாளி (பிரதமர்) ஒரு திருடன் என்பது நாட்டு மக்களுக்கு தற்போது தெளிவாகி இருக்கிறது. விமானப்படை மற்றும் இளைஞர்களிடம் இருந்து பணத்தை அவர் திருடி உள்ளார். ஒட்டுமொத்த நாடும் இதை புரிந்து கொண்டு இருக்கிறது. பிரதமர் எங்கும் ஓடி ஒளியலாம், ஆனால் உண்மையில் இருந்து அவர் ஒளிய முடியாது.
அவர்கள் (மத்திய அரசு) எத்தனை பேரை கைது செய்தாலும், எங்கள் போராட்டம் தொடரும் என்று ராகுல் காந்தி கூறினார்.
சி.பி.ஐ. இயக்குனர் நீக்கத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட விவகாரம் டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.பி.ஐ. இயக்குனர் நீக்கத்தை கண்டித்து டெல்லியில் நடந்ததைப் போல், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், எதிர்க்கட்சியினரும் கலந்து கொண்டனர்.