7 எம்.பிக்கள் 199 எம்.எல்.ஏக்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை !
வேட்பு மனு தாக்கலின் போது, பான் கார்டு விவரங்களை தெரிவிக்க வேண்டியுள்ள நிலையிலும், தற்போது பதவியில் உள்ள 9 எம்.பிக்கள், 199 எம்.எல்.ஏக்கள் தங்களது பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்புகள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத மக்கள் பிரதிநிதிகளில், அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச்சார்ந்தவர்களே ஆவர். காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 51 எம்.எல்.ஏக்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை. அதேபோல், பாரதீய ஜனதா கட்சியைச்சேர்ந்த 42 எம்.எல்.ஏக்கள், சிபிஐ(எம்) கட்சியைச்சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் முறையே வெளியிடவில்லை. மாநில வாரியாக கேரளாவில் 33 எம்.எல்.ஏக்களும், மிசோரத்தில் (28), மத்திய பிரதேசத்தில் (19) எம்.எல்.ஏக்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், மிசோரம் மாநிலத்தின் மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையே 40 என்றிருக்க, அவர்களில் 28 பேர் பான்கார்டு விவரங்களை வெளியிடாமல் உள்ளனர்.
எம்பிக்களை பார்த்தோமேயானால், ஒடிசாவில் இரண்டு எம்.பிக்களும், தமிழ்நாட்டில் இரண்டு எம்.பிக்களும் அசாம், மிசோரம், லக்ஷதீவு ஆகிய இடங்களைச்சேர்ந்த தலா ஒரு எம்.பிக்களும் பான்கார்டு விவரங்களை சமர்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத இரண்டு எம்.பிக்களுமே அதிமுகவைச்சேர்ந்தவர்கள் ஆவர்.