சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பேசி வந்த சாமியாரின் ஆஷ்ரமம் சூறை
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களின் கடும் எதிர்ப்பால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விவகாரத்தில், கேரளாவில் பெரும் பதற்றம் நீடித்தது.
இந்த நிலையில், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பேசி வந்த மத போதகர் சுவாமி சந்தீபானந்தாவின் ஆஷ்ரமம் அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்த ஒரு கும்பல், அடித்து நொறுக்கினர். ஆஷ்ரம வளாகத்தில் நின்ற இரண்டு கார்களையும் தீயிட்டு எரித்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தப்பி ஓடிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தாக்குதல் நடைபெற்ற ஆஷ்ரமத்திற்கு இன்று காலை சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் பினராயி விஜயன் கூறும் போது, “ சித்தாந்தரீதியாக எதிர்கொள்ள முடியாத போது, இது போன்ற வன்முறைகள் அரங்கேறுகின்றன. சட்டம் ஒழுங்கை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம். சுவாமியின் செயல்பாடுகளை சகித்துக்கொள்ள முடியாதவர்கள், அவரது ஆஷ்ரமத்தை தாக்கியுள்ளனர்” என்றார். தாக்குதலைத்தொடர்ந்து, ஆஷ்ரமத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.