ரபேல் விவகாரத்தில் சீலிடப்பட்ட 3 கவரில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இதைத்தொடர்ந்து ரபேல் ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நாளை (புதன்கிழமை) விசாரிக்கப்படும் நிலையில், வினீத் தண்டா என்ற வக்கீல் புதிதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் மற்றும் இந்த விமானங்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் தற்போது வாங்கும் விலைக்கு இடையிலான ஒப்பீடு போன்றவற்றை வெளியிட மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரர் நிறுவனமாக ரிலையன்ஸ் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் கடந்த 10 ந்தேதி விசாரணைக்கு வந்தது.
பாதுகாப்புத் துறை மேற்கொண்ட கொள்முதல் குறித்த விவரங்கள், நாட்டின் பாதுகாப்பு கருதி, தனிநபர்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ வழங்கப்படுவதில்லை. மேலும், ராணுவ விவகாரங்களைப் பொதுநல மனுக்கள் வாயிலாக விசாரிக்க முடியாது. முக்கியமாக, ராணுவ கொள்முதல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது.
இந்த மனுக்கள், தேர்தல் சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடி தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். எனவே, அவற்றைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று அவர் வாதாடினார்.
இந்த ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, மனுக்களில் மிகக் குறைவான தகவல்களே அளிக்கப்பட்டுள்ளன. மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள ஊழல் விவகாரம் குறித்து, தற்போது உச்ச நீதிமன்றம் எதையும் உறுதி செய்யவில்லை. அதே வேளையில், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒப்பந்தத்துக்காக மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவுகள் குறித்த அடிப்படை விவரங்களையும் சுப்ரீம் கோர்ட் விரிவாக அறிந்துகொள்ள விரும்புகிறது.
மேலும், அதன் சட்டப்பூர்வத்தன்மையை ஆராயவும் விரும்புகிறது. எனவே, அது தொடர்பான விவரங்களை, மூடி முத்திரையிட்ட 3 தனித்தனி உறைகளில் வைத்து, வரும் 29-ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள போர் விமானங்களின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்த தகவல்களைத் தாக்கல் செய்யத் தேவையில்லை.
இது சுப்ரீம் கோர்ட்டில் புரிதலுக்காக, மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள விளக்கமே தவிர, மத்திய அரசுக்கு அனுப்பப்படும் நோட்டீஸ் அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக அரசு எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளையும், மூடி முத்திரையிட்ட 3 உறைகளில் வைத்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தது.