ராஜபக்சே பதவி ஏற்பில் இந்தியாவின் தலையீடு இருக்கிறதா? இலங்கை மந்திரி ரவூப் ஹக்கீம் பதில்
இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றது குறித்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அந்த நாட்டின் மத்திய மந்திரியுமான ரவூப் ஹக்கீம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராஜபக்சே முதலில் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும். இதுவரையில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் எங்களுக்கு தென்பட்டதாக இல்லை. இந்த அதிர்ச்சி வைத்தியத்தை அதிபர் செய்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் பிரமிப்பாக இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் இது எவ்வளவு அரசியல் நாகரிகம் சார்ந்த விஷயம் என்ற கேள்வியும் எழுவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த விவகாரம் பற்றி எப்படி இருந்தாலும் எங்கள் நாடு திரும்பி சென்ற பின்னர் கட்சியிடம் மேலிடத்தை அழைத்து அவசரமாக விவாதிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
காரணம் என்ன?
இதையடுத்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ரனில் விக்ரமசிங்கேவை நீக்குவதற்கான காரணம் என்ன?
பதில்:- காரணம் சொல்ல வேண்டும் என்றால், பல விஷயங்களை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் அண்மைகாலமாக அதிபர் பேசி வருகிறார். அது நிறைய சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. ராஜபக்சே பதவி ஏற்றது அதிர்ச்சி வைத்தியமாக இருந்தாலும் கூட, இந்த நிலவரம் ஏற்பட்டிருப்பது கவலை தருகின்ற விஷயம். இந்த மாற்றம் நீடிக்கவேண்டுமா? இல்லையா? என்று நிர்ணயிக்கும் சக்தி எங்களிடம் இருக்கிறது. இதை நாடு திரும்பிய பின்னர் தீவிரமாக ஆராய்வோம்.
தலையீடு
கேள்வி:- ராஜபக்சே பதவி ஏற்பில் இந்தியாவின் தலையீடு இருக்கிறதா?
பதில்:- டெல்லிக்கும் (மத்திய அரசு), இந்த மாற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஆருடம் கூற நான் விரும்பவில்லை. உள்நாட்டு விவகாரங்களில் அவ்வாறு டெல்லி அனாவசியமாக தலையிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.