வல்லரசு நாடுகள் பட்டியல்: 6-ஆவது இடத்தில் இந்தியா
உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்து அமெரிக்கப் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி அமெரிக்கன் இன்டரஸ்ட்’ பத்திரிக்கை, உலகின் சக்தி வாய்ந்த முதல் 8 நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.
அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள, 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் 8 வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தப் பத்திரிகையில் தெரிவிக்க பட்டுள்ளதாவது:
உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில், ஜப்பானைப் போலவே இந்தியாவும் அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், உண்மையில் பிற நாடுகளைப் பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு உலக அரங்கில் இந்தியாவுக்கு தனித்துவம் வாய்ந்த செல்வாக்கு உள்ளது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஆங்கிலம் பேசக் கூடியவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
பல்வேறு இன, மொழி, கலாசாரங்களைக் கொண்டுள்ள அந்த நாடு, அதிவேகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகிறது. உலக அரசியலில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கிறது. இந்தியாவுடன் ராணுவ மற்றும் பொருளாதார நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் போன்ற நடவடிக்கைகளால் இந்தியா உறுதியாக அடியெடுத்து வைக்கிறது. பாகிஸ்தானால் ஏற்பட்ட அச்சுறுத்தல், பெருமதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது போன்ற அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்னைகளையும் மீறி, பல்வேறு விவகாரங்களிலும் இந்தியா தயக்கமின்றி செயல்பட்டது.
நீண்டகாலமாக அணிசேரா நாடாகத் திகழ்ந்து வரும் நிலையிலும், அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடனான உறவில் மோடி அரசு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. மேலும், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காக ஜப்பான், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனும் மோடி அரசு பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டது என்று அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், முதல் இடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனா மற்றும் ஜப்பான் நாடுகளும் பிடித்துள்ளன. ரஷியா 4-ஆவது இடத்தையும், ஜெர்மனி 5-ஆவது இடத்தையும் வகிக்கின்றன. 7 மற்றும் 8-ஆவது இடங்களில் முறையே ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடம் பெற்றுள்ளன.
நன்றி : தினமணி