ரனில் விக்ரமசிங்கே அதிரடி நீக்கம் இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் ராஜபக்சே பிரதமர் ஆனார்
இலங்கையில் 10 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர், ராஜபக்சே.
2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அவரது மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த சிறிசேனா பதவி விலகி, அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதே ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, சிறி சேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஒற்றுமை அரசு என்ற பெயரில் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கூட்டணி அரசு அமைத்தன. பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில், முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அரசு மீதான வாக்கெடுப்பாக, அத்தேர்தல் கருதப்பட்டதால், ஆளும் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக உணரப்பட்டது. அத்துடன், ராஜபக்சே, இலங்கை அரசியலில் மீண்டும் செல்வாக்கு பெற்றார்.
தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு சிறிசேனா கோரியதை ரனில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. பின்னர், கண்டி மாவட்டத்தில், புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பிரதமர் ரனிலிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு துறையை பறித்து அதிபர் உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம், ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் ஆதரித்தது விரிசலை உண்டாக்கியது.
மேலும், அதிபர் சிறி சேனாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டு இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அதுதொடர்பாக இந்தியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சதித்திட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அதிபர் சிறிசேனா கடந்த வாரம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணியில் விரிசல் அதிகரித்தது.
இந்த பரபரப்பான சூழ் நிலையில், நேற்று இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. இலங்கை கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கட்சி அறிவித்தது. இதை நாடாளுமன்றத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்து விட்டதாக அதன் பொதுச் செயலாளரும், இலங்கை வேளாண் மந்திரியுமான மங்கள அமரவீரா கூறினார்.
அதைத்தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை சிறிசேனா நீக்கினார். இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார்.
உடனடியாக, அதிபர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மந்திரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இருப்பினும், ராஜபக்சேவை பிரதமராக நியமித்த அதிபரின் நடவடிக்கை, அரசியல் சட்ட சிக்கலை உருவாக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால், ரனில் விக்ரமசிங்கேயை பிரதமர் பதவியில் இருந்து நீக்க, 19-வது அரசியல் சட்ட திருத்தப்படி, இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் ஒப்புதல் பெற வேண்டும். அறுதி பெரும்பான்மைக்கு 113 எம்.பி.க்கள் தேவை. ஆனால், சிறிசேனா-ராஜபக்சே கட்சிகளின் கூட்டணிக்கு மொத்தம் 95 எம்.பி.க்கள்தான் உள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 எம்.பி.க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு அக்கட்சிக்கு 7 எம்.பி.க்கள்தான் குறைவாக உள்ளனர்.
ஆனால், சிறிசேனா-ராஜபக்சே கட்சிகளின் கூட்டணிக்கு 18 எம்.பி.க்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால், ரனில் விக்ரமசிங்கே நீக்கத்துக்கு நாடாளுமன்ற ஒப்புதலை பெற முடியாமல், அரசியல் சட்ட சிக்கல் உருவாகும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் பதவியில், தானே நீடிப்பதாக ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். ஒரு டி.வி. சேனலுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்தார். ராஜபக்சே பதவி ஏற்ற செயல், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் அவர் கூறினார்.
அவரது கட்சியை சேர்ந்த இலங்கை நிதி மந்திரி மங்கள சமரவீரா, ‘ராஜபக்சே நியமிக்கப்பட்ட செயல், ஜனநாயக விரோத புரட்சி’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.