Breaking News
மீடு விவகாரம்: நாங்கள் ஆதாரங்களை வெளியிட்டு விடுவோம் எனக் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள் – சொர்ணமால்யா

மீ டூ இயக்கம் மூலம் கர்நாடக இசைக் கலைஞர்கள் மீது எழுப்பப்பட்டு வரும் புகார்கள் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு சொர்ணமால்யா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

இது நீண்ட காலமாக தொடர்ந்து வரும் ஒன்றுதான் என அனைவருக்குமே தெரியும். தெரியும் என்றால் அப்போதே ஏன் சொல்லவில்லை எனக் கேட்காதீர்கள்? இந்த மீ டூ பிரச்சாரம் பல உண்மைகளை தைரியமாக வெளிக்கொணரும். இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவே முயன்றேன். உலகின் பல இடங்களிலும் மீ டூ இயக்கம் தேவையற்றவர்களை வெளியேற்றியது.
ஆனால் கர்நாடக சங்கீத வட்டாரத்தில் என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும். கடந்த ஆண்டு ரயா சர்கார் வெளியிட்ட பட்டியலில் பப்பு வேணுகோபாலின் பெயரும் இருந்தது. அப்போது என்ன நடந்தது என்று அனைவருக்குமே தெரியும். மியூசிக் அகாடமி அந்த விஷயத்தை மேம்போக்காக விட்டுவிட்டது. அன்று யாரேனும் ஆதரவு அளித்திருந்தால் இன்று அனைவருமே தைரியமாக குரல் கொடுப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் யாரையும் குற்றச்சாட்டி முன் நிற்பதில்லை. யார் பெயரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டுவதில்லை. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் தாங்கள் சந்தித்த தொல்லைகள் குறித்து பேச யாரும் முன்வருவதில்லை. ஆனால் இன்று நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.

உண்மை நம் பக்கம் இருக்கிறது. இன்றும் நாங்கள் மிரட்டப்படுகிறோம். நாங்கள் ஆதாரங்களை வெளியிட்டு விடுவோம் எனக் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள். எங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால் வெளியிடமாட்டோம். அவர்கள் சரியாக நடந்து கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம்.

எதிர்காலத்தில் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் தெரிவித்து இருந்தோம். முறையான வழிகாட்டுதலின் மூலம் பிரச்சினைகளை சரி செய்யவே ஆலோசனை செய்தோம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்தோம். பலவற்றை பயிற்சி முறை என்றே நம்பி பின்தொடர்ந்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களில் பலரும் சிறுவர்கள். இது சிறுவர்களை உள்ளடக்கிய பிரச்சினை என்று கூறி உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.