Breaking News
“எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் பதிலடி கிடைக்கும்” – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை

காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறு விதமான பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் தினமும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சில் 22 வயது ராஜேந்திர சிங் என்னும் படை வீரர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதையடுத்து ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லி யில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படி கல்வீசி தாக்குதல் நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இதுபோல் தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வீச்சில் ஈடுபடுவோர் மீது ராணுவம் வழக்கும் பதிவு செய்யும்.

அதேபோல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) நிறுத்திக்கொள்ளவேண்டும். 1971-ம் ஆண்டு நம்மிடம் போரில் தோற்றதன் காரணமாக நமது அண்டை நாடு தொடர்ந்து பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது.

சட்ட ரீதியாக காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அதை யாரும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. அதை நாமும் முறியடிக்கிறோம். அதேநேரம் பாகிஸ்தான் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தால் வேறு விதமான பதிலடி தரவேண்டியது வரும் என்று அவர் கூறினார்.

ஆனால் அது எந்த மாதிரியான நடவடிக்கையாக அமையும் என்பது பற்றி ராணுவ தளபதி நேரடியாக குறிப்பிடவில்லை.

எனினும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து நடத்திய துல்லிய தாக்குதல் நடத்தியது போன்ற நடவடிக்கையாக அது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.