அய்யப்ப பக்தர்கள் போராட்டத்தை கேரள அரசு ஒடுக்க நினைக்கிறது – அமித்ஷா கண்டனம்
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஒரு நாள் பயணமாக நேற்று கேரள மாநிலம் வந்தார். கண்ணூரில் கட்சி அலுவலக திறப்பு விழாவிலும், திருவனந்தபுரம் அருகில் உள்ள வர்கலாவில் சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீநாராயண குருவின் 90-வது மகாசமாதி தின நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.
கண்ணூரில் பா.ஜனதா அலுவலகத்தை திறந்துவைத்து அமித்ஷா தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை கண்டித்து போராட்டம் நடத்திவரும் பக்தர்களுக்கு எதிராக போலீஸ் படையை மாநில கம்யூனிஸ்டு அரசு பயன்படுத்துகிறது. மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் இயக்கத்தினர் உள்பட 2 ஆயிரம் பக்தர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
போராட்டத்தை ஒடுக்கும் செயலில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் அதற்காக பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அரசின் இந்த செயல் நெருப்புடன் விளையாடுவது போலாகும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில் நடந்துவரும் அடக்குமுறைகளை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பினராயி அரசு தொடர்ந்து அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டால் ஆட்சியை இழக்க நேரிடும்.
கம்யூனிஸ்டு அரசு சபரிமலை கோவிலையும், இந்து பாரம்பரியத்தையும் அழிக்க முயற்சி செய்கிறது. இந்துக்களின் நம்பிக்கையில் விளையாடுவதை பா.ஜனதா ஒருபோதும் அனுமதிக்காது. மற்ற அனைத்து அய்யப்பன் கோவில்களிலும் பெண்கள் வழிபட எந்த தடையும் இல்லை. சபரிமலை கோவிலின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
மாநில அரசு கோவில்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறது. கேரளாவில் நெருக்கடிநிலை போன்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்கள். இதற்கு முன்பு பல கோர்ட்டு உத்தரவுகளை இந்த மாநில அரசு நிறைவேற்றவில்லை. இந்த பிரச்சினையில் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
இந்த மாநிலத்தில் பா.ஜனதா கட்சியின் முக்கிய கொள்கையாக சபரிமலை பிரச்சினை இருக்கும். 30-ந் தேதி முதல் இது தொடர்பாக பா.ஜனதா தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்று அவர் கூறினார்.
‘சாமியே சரணம் அய்யப்பா’ என்று கூறி பேச்சை தொடங்கிய அமித்ஷா, முடிக்கும்போது இந்த சரண கோஷத்தை தொண்டர்கள் அனைவரும் கூறும்படி கேட்டுக்கொண்டார்.
முன்னதாக கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் முதல் பயணியாக அமித்ஷா வந்திறங்கினார். இந்த விமான நிலையம் அதிகாரபூர்வமாக டிசம்பர் 9-ந் தேதி தான் திறக்கப்படுகிறது.