தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை: அ.தி.மு.க.வினர் 3 பேரை முன்கூட்டியே விடுவிக்க கவர்னர் மறுப்பு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 1991-1996-ம் ஆண்டில் அமைச்சராக இருந்த சிலர் மீது சென்னை தனிக்கோர்ட்டில் ஊழல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான பஸ் ஒன்றை தர்மபுரி அருகே நிறுத்தி அ.தி.மு.க.வினர் எரித்தனர். இந்த சம்பவத்தில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் எரிந்து பலியாகினர்.
தண்டனை குறைப்பு
இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
அப்பீல் வழக்கில் 3 பேரின் மரண தண்டனையையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் தொடர்ந்து ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
இந்த நிலையில், தமிழகமெங்கும் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 25-ந் தேதியன்று 10 ஆண்டுகளை முடித்துள்ள 1,800 ஆயுள் தண்டனை கைதிகளை எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது.
60 வயதை கடந்த ஆயுள் கைதி என்றால் அவர் 5 ஆண்டுகளை ஜெயிலில் கழித்திருந்தால் போதுமானது என்று அரசு கூறியிருந்தது.
திருப்பி அனுப்பினார்
கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கு அரசியல் சாசனப்பிரிவு 161-ன் அடிப்படையில் கவர்னரின் ஒப்புதலைப் பெறவேண்டும். அந்த வகையில், முன்கூட்டியே விடுதலை பெற ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட வழக்குகளை ஒவ்வொன்றாக கவர்னர் படித்துப் பார்த்தார்.
பின்னர் 500-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிப்பதற்கு அவர் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். ஆனால் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேர் தொடர்பான பரிந்துரையை மட்டும் ஏற்காமல், மறுபரிசீலனைக்காக அரசிடம் கவர்னர் திருப்பி அனுப்பிவிட்டார். தமிழக அரசு பரிந்துரைத்த வழக்குகளில் இது ஒன்றுதான் அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
நோக்கமில்லா கொலை
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தன்னிடம் பரிந்துரைக்கப்படும் வழக்குகள் பற்றிய சட்ட நிலை குறித்து விசாரிக்க அரசியல் சாசனத்தின்படி கவர்னருக்கு உரிமை உள்ளது. ஆயுள் கைதிகள் 3 பேர் தொடர்புடைய கோப்பை ஒப்புதலுக்காக கவர்னருக்கு மீண்டும் அரசு அனுப்பி வைக்கும்.
அந்த 3 கல்லூரி மாணவிகளையும் கொலை செய்வதில் இவர்கள் 3 பேருக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அவர்களைப் பற்றி அரசு பரிந்துரைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.