”யூதர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்”: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி!
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நடந்த யூதர்களின் வழிபாட்டுத்தலத்தில் “அனைத்து யூதர்களும் கொல்லப்பட வேண்டும்” என முழக்கங்களை எழுப்பியவாறே ராபர்ட் போவர்ஸ் என்பவர் 11 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட இனவெறி துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.பிட்ஸ்பர்க்கில் உள்ள யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றில் நேற்று குழந்தைக்கான பெயர்சூட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கைத்துப்பாக்கி மற்றும் எந்திர துப்பாக்கிகளுடன் நுழைந்த நபர் ஒருவர், அனைத்து யூதர்களும் கொல்லப்பட வேண்டும் என முழக்கங்களை எழுப்பியவாறே துப்பாக்கியால் சுட்டு கொண்டே உள்ளே நுழைந்தார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் கதறி அழும் பெண்கள். உள்படம் துப்பாக்கிச் சூடு நடத்திய ராபர்ட் போவர்ஸ்
கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 11 பேர் குண்டு துளைத்து உயிரிழந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். சில மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கி சண்டையின் போது 4 போலீஸார் உட்பட 6 பேர் காயமடைந்ததாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் தாக்குதலில் ஈடுபட்டது ராபர்ட் போவர்ஸ் எனும் 46 வயது நபர் என்றும், தாக்குதலின் பின்னணியில் வேறு ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் , விரைந்து செயல்படும் போலீசாரும் மீட்பு குழுவினரும்
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பிட்ஸ்பர்க் பகுதிக்கு சென்று பார்வையிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிட்ஸ்பேர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் இதில் மிக துணிச்சலாக செயல்பட்டு படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினருக்கு இதயம் கணிந்த பாரட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்.