Breaking News
விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தை இயக்கியவர் டெல்லி விமானி

இந்தோனேசியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.
வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. அதில் 8 பணிப்பெண்கள், 2 விமானிகள், 2 குழந்தைகள், ஒரு கைக்குழந்தை உட்பட 189 பேர் இருந்தனர். விமானம், 7.20 மணிக்கு பங்கல் பினாங் பகுதிக்கு சென்றடைய வேண்டும். ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததும் அதில் பயணித்தவர்களின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூடினர்.

இந்நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது, தெரியவந்தது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்தோனேசிய கடலில் மிதக்கின்றன. அவற்றை மீட்கும் பணி நடந்து வருகிறது விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இந்த விமானத்தை ஓட்டியவ்ர் டெல்லியைச் சேர்ந்த விமானி பாவ்ய் சுனேஜா ஆவார் இவர் 6,000 க்கும் மேற்பட்ட விமான மணிநேரங்களை வைத்துள்ளார். துணை விமானி ஹர்வினோ 5 ஆயிரம் விமான மணிநேரங்களை வைத்துள்ளார். என லயன் ஏர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

சுனேஜா கிழக்கு டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சுனேஜா லயன் ஏர் நிறுவனத்தில் கடந்த 2011 மார்ச் மாதம் சேர்ந்து உள்ளார். இந்தியாவுக்கு வந்து பணியாற்ற விரும்பி அதற்கான முயற்சிகளில் இருந்துள்ளார். அதற்குள் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.