Breaking News
இந்திய ‘ஐடி’ ஜோடி அமெரிக்காவில் பலி: 800 அடி உயர மலை உச்சியில் இருந்து விழுந்த பரிதாபம்

அமெரிக்காவில் 800 அடி உயர மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து ஐடித்துறையில் பணியாற்றும் இந்திய தம்பதியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐடி ஊழியர்களாக பணியாற்றி வந்த தம்பதி விஷு விஸ்வநாத் (வயது 29) மற்றும் மீனாட்சி மூர்த்தி (வயது 30) கேரள மாநிலம் செங்கனூரில் படிக்கும்போதே காதலித்த இவர்கள் பின்னர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் ஐடித்துறையில் வேலை கிடைத்து அங்கு சென்றனர். நியூயார்க்கில் பணியாற்றி வந்த இருவரும் சமீபத்தில் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகருக்கு இடம் மாறினர்.

சாகச பயணத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் சுற்றுலா செல்வது வழக்கம். சமீபத்தில் அவர்கள் கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா ஸ்தலமாமன யோசிமிட்டே தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்றனர். நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களை கண்டு களித்த அவர்கள் பின்னர். 800 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு சென்றனர்.

இங்குள்ள ‘தப்ட் பாயிண்ட்’ என்ற இடம் அதிக உயரம் கொண்ட இடம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த முனையில் இருந்து புகைப்படம் எடுப்பது வழக்கம். அந்த இடத்துக்கு சென்ற விஷு மற்றும் மீனாட்சி திடீரென தவறி விழுந்துள்ளனர். மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் விழுந்த அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தேசிய பூங்காவின் செய்தித்தொடர்பாளர் ஜெம்மி ரிச்சர்டு கூறுகையில் ‘‘அவர்கள் இருவரும் மேலே இருந்து கீழே விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. எனினும் தவறி விழுந்து இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது’’ எனக் கூறினார்.

சாகசப் பயணத்தில் ஆர்வமுள்ள தம்பதியின் திடீர் மரணம் அவர்களது நண்பர்களையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.