சென்னை ரெயில் கொள்ளை வழக்கில் கும்பல் தலைவன் உள்பட மேலும் 5 பேர் கைது 14 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
சேலம்-சென்னை ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்புதுலக்கி சாதனை படைத்தனர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி, ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஸ்வரி, பிரவீண்குமார் அபினப் ஆகியோரது நேரடி மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சாஸ்தா, இந்து சேகரன், சாமிக்கண்ணு ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ரெயில் கொள்ளை வழக்கில் துப்பு துலக்கியுள்ளனர்.
இந்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ் (வயது 38), ரோஹன் பார்த்தி (29) ஆகிய கொள்ளையர்கள் கடந்த 12-ந் தேதி அன்று கைது செய்யப்பட்டனர். பிரபல கொள்ளைக்காரன் மோஹர்சிங் என்பவர் தலைமையில் தான் இந்த கொள்ளையர்கள் செயல்பட்டுள்ளனர். மோஹர்சிங் உள்பட 5 கொள்ளையர்கள் மத்திய பிரதேசத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு 2 சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் 5 பேரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றனர். அங்கு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மோஹர்சிங் (35), ருசிபார்த்தி (31), காலியா என்ற கிருஷ்ணா என்ற கபு (36), மகேஷ்பார்த்தி (27), பில்தியா என்ற பிரஜ்மோகன் (26) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநில கோர்ட்டில் அவர்கள் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கோர்ட்டு அனுமதி பெற்று அவர்கள் 5 பேரும் நேற்று ரெயிலில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் 5 பேரும் சென்னை சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் 5 பேரையும், 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் அனுமதி கோரினார்கள். கோர்ட்டு அதற்கான அனுமதியை வழங்கியது. அதன்பேரில் கொள்ளையர்கள் 5 பேரும் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. முன்னதாக அவர்கள் 5 பேரையும் முகத்தை மூடிய நிலையில் போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொள்ளையர்கள் பார்த்தி கொள்ளையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தமிழகத்தில் திருவள்ளூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் 500 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுபற்றி இவர்களிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்படுகிறது. இதுதவிர தமிழகத்தில் வேறு எங்காவது கைவரிசை காட்டியிருக்கிறார்களா? என்றும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட உள்ளது.
ரெயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடி பணத்தை கொள்ளையர்கள் பங்குபோட்டுள்ளனர். ஆனால் அந்த பணத்தில் சொத்துகள் வாங்கினார்களா? அல்லது வேறு ஏதாவது ஆடம்பர செலவில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 கொள்ளையர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சொத்துகள் வாங்கியிருந்தால் அந்த சொத்துகளை கோர்ட்டு மூலம் முடக்க நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 கொள்ளையர்களை கைது செய்யவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.